ADDED : பிப் 12, 2024 12:40 PM

சென்னை: சில நாட்களுக்கு முன்பாக '14 லோக்சபா சீட்கள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் தருபவர்களுடன் கூட்டணி அமைப்போம்' எனக் கூறிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, தற்போது, '14 பிளஸ் 1 சீட் கேட்டது மாவட்ட செயலாளர்கள் தான், கட்சி தலைமை கேட்கவில்லை' என புது விளக்கம் அளித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் குறித்தான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் விஜயகாந்த் மறைவிற்கு பிறகு, தேமுதிக எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்ற கேள்வி எழுந்தது.
இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா சமீபத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தின் முடிவில், '14 லோக்சபா சீட்கள், ஒரு ராஜ்யசபா சீட் தரும் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும்' என செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த நிலையில், தேமுதிக.,வின் 24வது கொடிநாளை முன்னிட்டு தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியதாவது: நான் சொல்வதை புரிந்துகொள்ளாமல் மாற்றுக்கருத்தை பதிவிடுகின்றனர். 14 பிளஸ் 1 சீட் கேட்டது மாவட்ட செயலாளர்கள் தான்; கட்சி தலைமையின் கருத்தோ, என்னுடைய கருத்தோ இல்லை. திமுக, அதிமுக, பா.ஜ., ஆகிய கூட்டணிகளில் இடம்பெறுவது குறித்தும் மாவட்ட செயலாளர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.
கூட்டணி குறித்து மறைமுகமாக பேச வேண்டிய அவசியம் இல்லை. கூட்டணி குறித்து கட்சி தலைமை இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த முடிவும் எடுக்கவில்லை. மீண்டும் ஒரு ஆலோசனை கூட்டத்திற்கு பின் கூட்டணி குறித்து அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

