எக்ஸ்பிரஸ் வேகத்தில் 'அம்ரித் பாரத்' திட்டப்பணி; வேற லெவலுக்கு மாறப்போகிறது போத்தனூர் ரயில்வே ஸ்டேஷன்
எக்ஸ்பிரஸ் வேகத்தில் 'அம்ரித் பாரத்' திட்டப்பணி; வேற லெவலுக்கு மாறப்போகிறது போத்தனூர் ரயில்வே ஸ்டேஷன்
ADDED : பிப் 07, 2024 05:14 AM

கோவை;''அம்ரித் பாரத் திட்டதில், போத்தனுார் மற்றும் வடகோவை ரயில்வே ஸ்டேஷன்களை மேம்படுத்தும் பணிகள் படுவேகமாக நடந்து வருகின்றன. லோக்சபா தேர்தல் நெருங்குவதால், பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள 508 ரயில்வே ஸ்டேஷன்கள், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் தமிழகத்தில் மட்டும் 18 ரயில்வே ஸ்டேஷன்களில், 381 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இதில் சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட சேலம், திருப்பூர், போத்தனுார், வடகோவை ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில், அம்ரித் பாரத் திட்ட பணிகள் நடக்கின்றன. இந்த திட்டத்தில் கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு இணையாக, போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. லோக்சபா தேர்தல் நெருங்குவதால் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயில் இரண்டாவது கட்டமாக, 44 ரயில்வே ஸ்டேஷன்கள் மேம்படுத்தும் பணிகளுக்கு, பிரதமர் மோடி, இந்த மாதம் இறுதியில் அடிக்கல் நாட்ட உள்ளதாக, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
போத்தனுார் வழித்தடத்தில் தற்போது, 38 ரயில்கள் இயக்கப்படுகின்றன. 14 ரயில்கள் தினசரி நின்று செல்கின்றன.அம்ரித் பாரத் திட்டப்பணிகள் முடிந்த பின், போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனில் இன்னும் பல ரயில்கள் நின்று செல்லும் வாய்ப்பு உள்ளது.
இது குறித்து, ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, 'கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில், அம்ரித் பாரத் திட்டத்தில், போத்தனுார் ஸ்டேஷன் சீரமைக்கும் பணியை பிரதமர் துவக்கி வைத்தார். திட்டமிட்டபடி பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மாதங்களுக்குள் பணிகள் முடிய வாய்ப்புள்ளது' என்றார்.
கலர்புல் வசதிகள்!
கான்கிரீட் ரோடு, வடக்கு பக்கத்தில் இருந்து போத்தனுார் ரயில்வே ஸ்டேனுக்குள் வர நுழைவுவாயில், பயணிகளின் டூவீலர் மற்றும் கார் நிறுத்த பார்க்கிங் வசதி, வெளியே சிறு பூங்கா, உள்ளே பயணிகள் அமர்வதற்கான சொகுசு இடம், ஏ.சி., ஓய்வு அறை, லிப்ட், கோச் டிஸ்ப்ளே போர்டு, எல்.இ.டி., விளக்குகள், எல்.இ.டி., டைம் டேபிள் டிஸ்ப்ளே போர்டு, அனைத்து நடை மேடைகளிலும் கூரைகள் அமைப்பது உள்ளிட்ட, பல வசதிகளுடன் பயணிகளுக்கு நகரும் படிக்கட்டுகள் மற்றும் பேட்டரி கார் வசதிகளும் வர உள்ளன.

