மீண்டும் மோடி பிரதமரானால் வாரணாசியை தலைநகராக மாற்றுவார்களாம்!: வைகோ சொல்கிறார்
மீண்டும் மோடி பிரதமரானால் வாரணாசியை தலைநகராக மாற்றுவார்களாம்!: வைகோ சொல்கிறார்
ADDED : ஏப் 10, 2024 12:38 PM

திருச்சி: மீண்டும் மோடி பிரதமரானால், அவரின் தொகுதியான வாரணாசியை தலைநகராக மாற்றுவதாகவும், அரசியலமைப்பை மாற்றுவதாகவும் ஆமதாபாத்தில் இந்துத்துவா சக்திகள் பிரகடனம் எடுத்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து அவரது தந்தையும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
நம் நாட்டில் எத்தனையோ பிரதமர்கள் ஆட்சி செய்தனர். ஆனால், சமூகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய திராவிட இயக்கத்தை அழித்து, ஒழித்துவிட்டுதான் மறுவேலை பார்ப்பேன் என பிரதமர் மோடி ஊருக்கு ஊர் பேசி வருகிறார். இது அவரது ஆணவத்தை காட்டுகிறது. இது பற்றி அவரை நேரில் சந்திக்கும்போது கேட்பேன்.
இந்தியாவில் உள்ள இந்துத்துவ சனாதன சக்திகள் ஒன்றிணைந்து மாநாடு நடத்தியது. அப்போது மோடி மீண்டும் பிரதமரானால், இந்திய அரசியல் சட்டம் அடியோடு மாற்றுவோம், அடுத்ததாக தலைநகரை வாரணாசிக்கு மாற்றுவோம் என 32 பக்கத்திற்கு ஒரு பிரகடனத்தை ஆமதாபாத்தில் இந்துத்துவா சக்திகள் வெளியிட்டன.
இவ்வளவு பேரபாயம் இருப்பதை அனைவரும் உணர்ந்து மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து ஜனநாயகத்தை காக்கும் கடமையை மேற்கொள்ள வேண்டும். இத்தேர்தல் என்பது 2வது சுதந்திர போரை போன்றது. இவ்வாறு அவர் பேசினார்.

