பா.ஜ., மீண்டும் வெற்றி பெற்றால் ஒரு வாரத்தில் தி.மு.க., ஆட்சியை கலைப்பர்: திருமாவளவன்
பா.ஜ., மீண்டும் வெற்றி பெற்றால் ஒரு வாரத்தில் தி.மு.க., ஆட்சியை கலைப்பர்: திருமாவளவன்
UPDATED : ஏப் 12, 2024 08:44 PM
ADDED : ஏப் 12, 2024 03:54 AM

சென்னை : தென் சென்னை தி.மு.க., வேட்பாளர் தமிழச்சியை ஆதரித்து, எம்.ஜி.ஆர்., மார்க்கெட் பகுதியில் நேற்று, பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.
இதில், பங்கேற்ற வி.சி., தலைவர் திருமாவளவன் பேசியதாவது: இந்த தேர்தல், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும், மக்கள் நடத்தும் அறப்போர். சங் பரிவாருக்கும்,- மக்களுக்கு இடையே நடக்கும் போர். இதில், மக்கள் நம் பக்கம் இல்லை; நாம் மக்கள் பக்கம் நிற்கிறோம். முதல்வர் ஸ்டாலின், இரு ஆண்டுகளுக்கு முன், தேசிய அளவில் வியூகம் வகுத்து, இந்த தேர்தலை வழிநடத்தி வருகிறார்.
அதன் அடிப்படையில் தான், இவ்வளவு நெருக்கடிகளை சகித்து கொண்டு, எதிர்க்கட்சிகள் பக்கம் நிற்கிறார். ஜனதா என 1977ல், வரலாறுமிக்க ஒரு கூட்டணியை, முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைத்தார். அன்று, காங்., கட்சிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்க வேண்டிய சூழல் இருந்தது. அதேநிலை, 2024ல் உருவாகியுள்ளது.
தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்பது அல்ல; தி.மு.க., வெற்றி பெற வேண்டும் என்பது அல்ல நோக்கம்.
இந்தியா முழுதும் இண்டியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். அப்போது தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும்; மக்களை காப்பாற்ற முடியும்.
மோடி, மீண்டும் பிரதமரானால், ரேஷன் கடைகள் இருக்காது; 100 நாள் வேலை திட்டம் இருக்காது; தேர்தல்கள் இருக்காது; இட ஒதுக்கீடு இருக்காது. மகளிர் உரிமை தொகை தர முடியாது.
மாநில ஆட்சிகள் கலைக்கப்பட்டு, கவர்னர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்படும். இது கற்பனை அல்ல; அவர்களே வெளிப்படையாக பேசுகின்றனர். பா.ஜ., கூட்டணி, 400 இடங்களில் வெற்றி பெற்றால், ஒரு வாரத்தில் தி.மு.க., ஆட்சியை கலைப்பர். இவ்வாறு அவர் பேசினார்.

