நட்சத்திர பிரசாரம்' ஜொலிக்கலையே! வாக்காளர்களுக்கு ஒரே ஆறுதல் கமல் தான்
நட்சத்திர பிரசாரம்' ஜொலிக்கலையே! வாக்காளர்களுக்கு ஒரே ஆறுதல் கமல் தான்
ADDED : ஏப் 05, 2024 07:05 AM

வெயிலின் தாக்கம் ஒரு பக்கம்; தேர்தல் பிரசாரம் மறுபக்கம் என, தமிழகமெங்கும் சூடு கிளப்பி வருகிறது.
தேர்தல் என்றாலே பிரசாரப் பட்டியலில், திரைப்பட நடிகர்களின் பங்களிப்பு, ஒவ்வொரு கட்சியிலும் அதிகமாக இருக்கும். இவர்களை பார்க்கவே கூட்டம் கூடும். அதை வைத்து, தங்களுக்கான பலத்தை கட்சியினர் வெளிப்படுத்தி வந்தனர்.
சட்டசபை தேர்தல் சமயத்தில், மறைந்த முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் இருந்தபோது, அ.தி.மு.க., சார்பில் சிம்ரன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அடுத்த தேர்தலில் பிரசாரம் செய்ய சிம்ரன் மறுத்து விட்டார்.
விஜயகாந்த் குறித்து வடிவேலு பேசிய பேச்சு, திரைத்துறையில் இருந்தே அவரை ஒதுக்கி வைத்தது. 'மாமன்னன்' திரைப்படத்துக்கு பின், இனி சினிமாவில் கவனம் செலுத்தப் போகிறேன் என்று வடிவேல் அறிவித்தார்.
இருந்தாலும் அவரை, பிரசாரம் செய்ய தி.மு.க., மேலிடம் அழைத்த போது கூட, வடிவேல் மறுத்து விட்டார்.
சினிமாவில் நடிக்கப் போவது ஒரு காரணமாக இருந்தாலும், முன்னர் ஏற்படுத்திய காயம், இன்னமும் அவர் பாஷையில் சொல்லப் போனால்... 'எல்லாம் கண்ணு முன்னால வந்து போகும்ல...' என்பதால், மறுத்து விட்டார்.
இவரது இடத்தை, சிரிப்பு நடிகர் கருணாஸை வைத்து நிரப்ப தி.மு.க., மேலிடம் திட்டமிட்டுள்ளது. 'இவர் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது, திருவாடனைக்கு என்ன செய்தார்' என எதிர்கேள்வி கேட்டு, மக்கள் மடக்கி வருகின்றனர்.
அடுத்த கட்டமாக, தி.மு.க.,வின் பிரசாரத்துக்கான சினிமா நட்சத்திரமாக உதவப் போகிறவர் நடிகர் கமல் தான். இதற்கு பரிசாகத்தான் ஒரு ராஜ்யசபா இடம் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலின்போது, 'நான் தான் சகலகலா வல்லவன்' என்று திக்கெட்டும் பரவிய பாட்டுக்கும், இவரின் பிரசாரத்துக்கும், ஓட்டுக்கள் வழங்கியவர்கள் ஏராளம். தி.மு.க.,வுக்கு எதிராக, டார்ச் லைட்டால் 'டிவி'யை உடைத்தவர் என்பதால், இவரது ரசிகர்கள் அப்படியே தொண்டர்களாக இணைந்தது, கூடுதல் பலம்.
இன்று தி.மு.க.,விடம் தஞ்சம் அடைந்திருப்பதால், தொண்டர்கள் பலர், மீண்டும் ரசிகர்களாக மாறிவிட்டனர்.
மஞ்சும்மல் பாய்ஸ் படத்துக்கு பின், மீண்டும் உயிர் பெற்றிருக்கிற பாடல்... 'கண்மணி அன்போடு காதலன்'. அதையே செல்லும் இடங்களில் எல்லாம் சொல்லி, வாக்காளர்களை கவர முயற்சிக்கிறார்.
வாக்காளர்களுக்கு இப்போதிருக்கும் ஒரே ஆறுதல், கமல் தான். 'எனக்கு உண்டான காயம் எல்லாம் தன்னால ஆறிடும். அது என்னமோ தெரியல... என்ன மாயமோ தெரியல... எனக்கு ஒண்ணுமே ஆகறதுல்ல...'நீங்கள் சொன்னது தான் கமல் சார். கரெக்டா மேட்ச் ஆகுதுல்ல...
ரஜினி ரசிகனின் வாய்ஸ்: நல்ல வேளை, எங்க தலீவரு தப்பிச்சாரு.

