பணக்காரர்களாக இருந்தால் தான் "பிட்" ஆன அமைச்சரா?: அண்ணாமலை கேள்வி
பணக்காரர்களாக இருந்தால் தான் "பிட்" ஆன அமைச்சரா?: அண்ணாமலை கேள்வி
ADDED : பிப் 06, 2024 05:33 PM

சென்னை: 'பணக்காரர்களாக இருந்தால் தான் பிட் ஆன அமைச்சரா?' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திமுக எம்.பி., டி.ஆர்.பாலு, மத்திய இணையமைச்சர் முருகனைப் பார்த்து 'அன்பிட்' என்று கூறுகிறார். தகுதியில்லாத அமைச்சர் என்று கூறுகிறார். பார்லிமென்டில் தன்னுடைய துறை சார்ந்த கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருக்கும் மத்திய அமைச்சரைப் பார்த்து டி.ஆர்.பாலு இவ்வாறு கூறியிருக்கிறார்.
யார் 'பிட்'? அல்லது 'அன்பிட்'
'பிட்' ஆன அமைச்சர் என்றால் யார் என்று டி.ஆர்.பாலுவிடம் கேட்க விரும்புகிறேன். கொள்ளை அடிப்பவரா, அப்பா தலைவராக இருப்பார், மகன் அமைச்சராக இருப்பதா? இல்லை. ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள் 'பிட்' ஆன அமைச்சரா?. இல்லை பணக்காரர்களாக இருந்தால் 'பிட்' ஆன அமைச்சரா? அமைச்சர் முருகனின் தாய் தந்தையர் நாமக்கல்லில் தோட்டத்து வேலை செய்து வருவதால், அவர் 'அன்பிட்' அமைச்சரா? இல்லை அருந்ததியர் சமுதாயத்தில் பிறந்ததால் 'அன்பிட்டா'?. இது வாய்க்கொழுப்பு மட்டுமல்ல. ஆணவத்தின் உச்சம். அரசியலில் 'பிட்' மற்றும் 'அன்பிட்' என்பது மக்கள் முடிவு செய்வது தான்.
மன்னிப்பு
எனவே, மத்திய இணையமைச்சர் முருகனிடம் டி.ஆர்.பாலு பொது இடத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும். நீங்கள் முருகன் குறித்து தவறாக பேசவில்லை. அவருடைய சமுதாயம் குறித்து தவறாக பேசியிருக்கிறீர்கள். தமிழகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த பட்டியலின சகோதர, சகோதரிகளை டி.ஆர்.பாலு தவறாக பேசியுள்ளார். ஒட்டுமொத்த அருந்ததிய சமுதாயத்தை தவறாக பேசியுள்ளார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
எது சமுக நீதி?
தமிழகத்தில் 35 அமைச்சர்கள் உள்ளனர். அதில் மூன்று பேர் மட்டுமே பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதுவா சமூக நீதி? ஆனால், மத்திய பா.ஜ., அரசில் மொத்தமுள்ள 75 பேரில் 12 பேர் பட்டியலின சமூகத்தினர், 8 பழங்குடியினர் என 20 பேர் அங்கம் வகிக்கிறார்கள். எது சமுக நீதி?.இவ்வாறு அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

