சு.வெங்கடேசன் எம்.பி., பதவியை பறிக்க சபாநாயகருக்கு கடிதம்
சு.வெங்கடேசன் எம்.பி., பதவியை பறிக்க சபாநாயகருக்கு கடிதம்
UPDATED : மார் 21, 2025 05:11 AM
ADDED : மார் 20, 2025 08:05 PM

மதுரை:மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் உயர் நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி தனபால் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசிய மார்க்சிஸ்ட் கம்யூ., - எம்.பி., வெங்கடேசனை பதவி நீக்கம் செய்யக்கோரி லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஹிந்து மக்கள் கட்சி கடிதம் அனுப்பியுள்ளது.
மதுரை மாவட்ட தலைவர் சோலைகண்ணன் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
மார்ச் 9ல் மதுரையில் நடந்த மதநல்லிணக்க மாநாட்டில் எம்.பி., வெங்கடேசன் பேசினார். திருப்பரங்குன்றம் மலை விவகாரம் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் நிலுவையில் இருக்கும்போது, நீதிமன்றத்தின் கண்ணியத்தையும், மாண்பையும் சீர்குலைக்கும் வகையில், இது தொடர்பாக ஏற்கனவே தீர்ப்பு வழங்கிய நீதிபதியை அசிங்கம், முட்டாள், அயோக்கியன் என தரக்குறைவான கீழ்த்தரமான வார்த்தைகளாலும், ஒருமையிலும் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார். இது நீதிமன்றத்தையும், நீதிபதியையும் களங்கப்படுத்தும் செயல்.
மக்கள் பிரதிநிதியான அவர், இப்படி பேசியது, இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது. அவரை எம்.பி., பதவியில் இருந்து, மக்கள் பிரதிநிதித்துவ பாதுகாப்பு சட்டப்படி தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

