தி.மு.க.,விடம் 8 தொகுதிகளை கேட்போம்: காதர் மொய்தீன்
தி.மு.க.,விடம் 8 தொகுதிகளை கேட்போம்: காதர் மொய்தீன்
ADDED : டிச 12, 2024 08:12 PM
தஞ்சாவூர்:தஞ்சாவூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவர் காதர் மொய்தீன் அளித்த பேட்டி:
தி.மு.க., கூட்டணியில், கடந்த சட்டசபை தேர்தலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூன்று தொகுதிகளில் போட்டியிட்டது; தோல்வியடைந்தோம். அதனால், வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., தலைமையிடம் மூன்று தொகுதிகள் மட்டுமே கேட்போம் என யாரும் எண்ண வேண்டாம்.
வரும் சட்டசபைத் தேர்தலில் எட்டு தொகுதிகளில் போட்டியிட இலக்கு நிர்ணயித்துள்ளோம். தி.மு.க., தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் நிறைய கட்சிகள் இருக்கின்றன. அதனால், எட்டு என்பதை ஆறு என்று வேண்டுமானால் குறைத்துக் கொள்வோம். கட்டாயம் ஆறு வேண்டும் என வலியுறுத்துவோம். அதற்கான பேச்சை விரைவில் துவங்க உள்ளோம்.
'கடந்த 1947, ஆக., 15ல் என்னென்ன கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் இருந்தனவோ, அவற்றையெல்லாம் பாதுகாக்க வேண்டும்' என நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது, 'வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991' கொண்டு வரப்பட்டது. இதில், பாபர் மசூதிக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது.
இச்சட்டத்தின்படி, வழிபாட்டுத் தலங்களில், எந்த மாற்றத்தையும் அரசோ, சமுதாய அமைப்புகளோ செய்யக்கூடாது. அப்படி செய்தால், அது தவறு. எனவே, இச்சட்டத்தை மத்திய அரசு பாதுகாப்பதோடு, அதன்படி செயல்பட அனைத்து தரப்பினரையும் வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

