"தேசபக்தி பற்றி யாரும் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்": ஸ்டாலின் பேச்சு
"தேசபக்தி பற்றி யாரும் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்": ஸ்டாலின் பேச்சு
ADDED : மார் 14, 2024 06:10 PM

சென்னை: 'தேசபக்தியைப் பற்றி எங்களுக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை' என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
வட சென்னை வளர்ச்சி திட்டப்பணிகளை துவக்கி வைத்த பின், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சென்னையை தலைசிறந்த நகரமாக மாற்றும் வகையில் வடசென்னை வளர்ச்சி திட்டப்பணிகள் துவங்கப்பட்டுள்ளது. வட சென்னையை முக்கிய நகரமாக மாற்ற திமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சென்னை மாநகரம் மீண்டும் புதுப்பொலிவு பெற்றுள்ளது. பாரிமுனை பேருந்து நிலையம் ரூ.832 கோடி மதிப்பில் நவீனமயாக்கப்படும்.
சென்னை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெள்ள பாதிப்பின் போது வராத பிரதமர் மோடி, நாளை கன்னியாகுமரிக்கு ஓட்டு கேட்டு வருவது நியாயமா?. தேசப்பக்தியைப் பற்றி எங்களுக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. வரியாக ஒரு ரூபாய் கொடுத்தால் 29 காசுகள் தான் தருகிறார்கள். அதுவும் பலமுறை வலியுறுத்திய பிறகே தருகிறார்கள். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி கேட்டு 3 ஆண்டுகள் ஆகியும் மத்திய அரசு நிதி வழங்கவில்லை.
நிதி ஏன் தரவில்லை என்று கேட்டால் பிரிவினைவாதி என்கிறார்கள். எங்களுக்கு பிரிவினைவாதம் எண்ணம் இல்லை. இந்தியாவின் வளர்ச்சிக்கு நாங்கள் குரல் கொடுத்தோம். என்னை எம்.எல்.ஏ.,வாகவும், மேயராகவும், துணை முதல்வராகவும், இப்போது முதல்வராகவும் ஆக்கியது வட சென்னை தான். மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதல் மேயராக மட்டும் அல்ல, முதல்வராகவும் அப்படித்தான் செயல்படுகிறேன். அது உங்களுக்கு தெரியும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

