பராமரிப்பின்றி 108 ஆம்புலன்ஸ்கள் துரிதமாக செயல்படுவதில் சிக்கல்
பராமரிப்பின்றி 108 ஆம்புலன்ஸ்கள் துரிதமாக செயல்படுவதில் சிக்கல்
ADDED : செப் 23, 2025 06:00 AM

கோவை : தமிழகத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள, 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில், 66 சதவீத வாகனங்கள் பழுதுடன் இயக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், துரிதமாக செயல்பட்டு நோயாளிகளை காப்பாற்றுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
மாநில சுகாதாரத்துறை புள்ளிவிபரங்களின் படி, தமிழகத்தில், 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 1,353 இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.
சாலை விபத்துக்களுக்கு, 11:46 நிமிடங்களில் அழைப்பிடங்களுக்கு செல்வதாக கூறப்பட்டுள்ளது.
2024 - 25ம் ஆண்டில் மட்டும், விபத்தில் சிக்கிய, 2.93 லட்சம் பேரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக புதிதாக கூடுதல் வாகனங்கள் வழங்கப்படவில்லை என்றும், மூன்று ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளவில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலர் ராஜேந்திரன் கூறியதாவது:
தமிழகத்தில், 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தின் கீழ், 6,000 பேர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறோம். 1,300க்கு மேல் வாகனங்கள் இருந்தன. தற்போது, பயன்பாட்டில், 900 வாகனங்களே உள்ளன.
அதிலும், 600 வாகனங்களை பல்வேறு பழுதுகளுடன் தான் இயக்கி வருகிறோம். அவசர சமயங்களில் பிரேக்டவுன் ஆவதையும், விபத்துக்கு உள்ளாவதையும் தவிர்க்க முடியவில்லை.
தற்போது, 12 மணி நேரம் தொடர்ந்து வாகனம் இயக்குவதால்சோர்வடைகிறோம். பணி நேரத்தை, 8 மணி நேரமாக மாற்ற வேண்டும். ஊதிய உயர்வை, 10 சதவீதமாக குறைத்துள்ளனர். விலைவாசி ஏற்றம், பணி சுமைக்கு ஏற்ப ஊதிய உயர்வு வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.