கூடங்குளம் 3வது, 4வது அணு உலை மின்சாரம்; தமிழகத்துக்கு யூனிட் ரூ.5.95க்கு வழங்க முடிவு
கூடங்குளம் 3வது, 4வது அணு உலை மின்சாரம்; தமிழகத்துக்கு யூனிட் ரூ.5.95க்கு வழங்க முடிவு
ADDED : டிச 12, 2025 05:06 AM

சென்னை: திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அணுமின் நிலையம் உள்ளது. அங்கு தலா 1,000 மெகா வாட் திறனில், இரு அணு உலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
அதிலிருந்து, தமிழகத்திற்கு தினமும் 1,152 மெகா வாட் மின்சாரமும், மீதி பிற மாநிலங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1,000 மெகா வாட் திறனில் மூன்றாவது, நான்காவது அணு உலைகள் அமைக்கும் பணிகள், 2016 - 17ல் துவங்கின.
தற்போது, கட்டுமான பணிகள் 70 சதவீதம் முடி வடைந்துள்ளன. மூன்றாவது அணு உலையில், 2026 டிசம்பரிலும், நான்காவது அணு உலையில், 2027 ஆகஸ்டிலும் உற்பத்தி துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த மின் நிலை யங்களில் இருந்து, ஒரு யூனிட் மின்சாரம் என்ன விலைக்கு வழங்கப்படும் என்ற விபரத்தை விரைவாக தெரிவிக்குமாறு, மத்திய மின் துறையிடம் தமிழக மின் வாரியம் தொடர்ந்து கேட்டு வந்தது.
இது தொடர்பாக, தென்மாநில மின்சார குழு கூட்டத்தில், மத்திய மின் துறை அதிகாரிகள் சமீபத்தில் விவாதித்துள்ளனர்.
அதன் அடிப்படையில், மூன்றாவது, நான்காவது அணு உலைகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, தமிழகத்திற்கு யூனிட் 5.95 ரூபாய்க்கு வழங்க, மத்திய மின் துறைக்கு இந்திய அணுமின் கழகம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இரு அணு உலைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இருந்து தமிழகத்திற்கு, 1,000 மெகா வாட் ஒதுக்கப்பட உள்ளது.

