முக்கிய பதவிகள் காலி; திட்ட பணிகள் இழுபறி நீர்வளத்துறை நிலவரம் இது
முக்கிய பதவிகள் காலி; திட்ட பணிகள் இழுபறி நீர்வளத்துறை நிலவரம் இது
ADDED : ஜூலை 03, 2025 12:49 AM
சென்னை:நீர்வளத் துறையில் முதன்மை தலைமை பொறியாளர் உள்ளிட்ட, முக்கிய பதவிகள் காலியாக உள்ளதால், திட்ட பணிகள் செயலாக்கத்தில் இழுபறி நீடித்து வருகிறது.
நீர்வளத்துறையில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி என, நான்கு மண்டலங்கள் உள்ளன.
இவற்றின் வாயிலாக, ஆறுகள், அணைகள், ஏரிகள் பராமரிப்பு, துார்வாருதல், நீர் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்குதல், கரைகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நான்கு மண்டலங்களுக்கும் தலைமை பொறியாளர்கள் உள்ளனர்.
முக்கியம்
திட்டம் உருவாக்கம், வடிவமைப்பு ஆராய்ச்சி, அணைகள் பாதுகாப்பு உட்பட, மொத்தம் 11 தலைமை பொறியாளர்கள் பணியிடங்கள், நீர்வளத்துறையில் உள்ளன.
இவர்களின் பணிகளை ஒருங்கிணைப்பது, முதன்மை தலைமை பொறியாளரின் பொறுப்பு.
துறையில் அமைச்சர், செயலருக்கு அடுத்து, முதன்மை தலைமை பொறியாளர் பதவி முக்கியமானது.
முதன்மை தலைமை பொறியாளராக இருந்த மன்மதன், கடந்த மே மாதம் 31ல் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக யாரும் நியமனம் செய்யப்படவில்லை.
மதுரை மண்டல தலைமை பொறியாளர் ரமேஷ், கூடுதல் பொறுப்பாக அப்பணியை கவனித்து வருகிறார். திருச்சி மண்டல தலைமை பொறியாளராக இருந்த தயாளகுமார், கடந்த 30ம் தேதி பணி ஓய்வு பெற்றார்.
துவக்கம்
காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில், இவர்தான் தமிழக உறுப்பினராக பங்கேற்று வந்தார். அவரது பணியிடத்தை நிரப்பாமல், கோவை மண்டல தலைமை பொறியாளர் முருகேசனை, பொறுப்பு அதிகாரியாக நியமித்துஉள்ளனர்.
இதேபோல, 20க்கும் மேற்பட்ட கண்காணிப்பு பொறியாளர்,செயற்பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அனைத்து மாவட்டங்களில் சாகுபடி காலம் துவங்கியுள்ளது.
அணைகளில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு பிரச்னை இல்லாமல், நீரை வழங்க வேண்டிய நேரத்தில், முக்கிய பதவிகள் காலியாக உள்ளன.
இதனால், அரசு அறிவித்த திட்டங்களின் செயலாக்கத்திலும் இழுபறி நீடித்து வருகிறது. தி.மு.க., பொதுச்செயலராக உள்ள துரைமுருகன், தன் பதவியை தக்கவைத்துக் கொள்ளும் வேலையில் இறங்கியுள்ளார்.
அதிருப்தி
கனிமவளத் துறை பறிக்கப்பட்டதால் கடும் அதிருப்தியில் இருக்கிறார்.
இதனால், நீர்வளத் துறை பணிகளில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுவே, காலியான பதவிகளை நிரப்புவதில் இழுபறி நீடித்து வருவதற்கான காரணமாக கூறப்படுகிறது.

