கமலின் ஒரு ராஜ்யசபா 'சீட்' முடிவால் ம.நீ.ம., நிர்வாகிகள் கொதிப்பு
கமலின் ஒரு ராஜ்யசபா 'சீட்' முடிவால் ம.நீ.ம., நிர்வாகிகள் கொதிப்பு
ADDED : மார் 10, 2024 07:48 AM

மதுரை : கட்சி ஆரம்பித்த புதிதில்தி.மு.க., -அ.தி.மு.க.,வுக்கு எதிராக குரல் கொடுத்து மக்களின் கவனத்தை ஈர்த்த ம.நீ.ம. தலைவர் கமல், சமீபகாலமாக நானும் ஒரு சராசரி 'அரசியல்வாதி' தான் என்பதை நிரூபித்து வருகிறார்.
கோவையில் தனித்து போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்ததால், பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைத்தால்தான் கட்சியை தொடர்ந்து நடத்த முடியும் என்ற கமலின் முடிவுக்கு நிர்வாகிகளும் ஆதரவு தெரிவித்தனர். அவர்களின் முதல் 'சாய்ஸ்' ஆளுங்கட்சியான தி.மு.க.,வாக இருந்தது.
முதன்முறையாக கூட்டணி அமைப்பதால் தனக்குரிய கவுரவம் தருவார்கள் என கமல் கருதினார். தி.மு.க., தலைமையிடம் பேசியபோது 'ஒரு 'சீட்'தான் தருவோம். அதுவும் தி.மு.க., சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும்' என நிபந்தனை விதிக்கப்பட்டது. இதை கமல் ஏற்கவில்லை. அமைச்சர் உதயநிதி மூலம் துாதுவிட்டு பார்த்தார். ஒருவழியாக நேற்று பேச்சுவார்த்தைக்கு கமல் அழைக்கப்பட்டார்.
'தி.மு.க., கூட்டணியில் கட்சிகள் அதிகம். தேசிய கட்சிகளாக கம்யூ., கட்சிகளுக்கே 2 'சீட்'தான் தந்துள்ளோம். காங்கிரஸ் இரட்டை இலக்க எண்ணிக்கையில் 'சீட்' கேட்கிறது. இச்சூழலில் உங்களுக்கு ஒரு 'சீட்' தந்தால் அது அரசியல் நெருக்கடிக்கு வழிவகுக்கும்.
அதற்கு பதில் அடுத்தாண்டு தி.மு.க.,வின் ராஜ்யசபா 'சீட்' ஒன்றை தருகிறோம்' என பேசப்பட்டது. இதையும் வேண்டாம் என்று சொன்னால் சிரமம்தான் எனக்கருதி அரை மனதோடு கமல் ஒத்துக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதற்கு ம.நீ.ம., கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:
பருத்திமூடை கோடவுனிலேயே இருந்திருக்கலாம்;
இதை விட கேவலம் ஏதுமில்லை. தலைவரின் முடிவை ஏற்போம் என்று சிலர் கூறுகிறார்கள். 'சிந்திங்க, சிந்திங்க' என்று தலைவர் சொல்கிறார். ஆனால் லட்சக்கணக்கான தொண்டர்களின் உணர்வை சிந்திக்காமல் எடுத்த முடிவா இருக்கு. இதை எப்படி ஏற்பது. எதிர்காலம், வளர்ச்சி இதெல்லாம் இனி ம.நீ.ம., கட்சிக்கு கனவிலும் கிடையாது. அதென்ன ஒரு ராஜ்யசபா 'சீட்'. அதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு சும்மாவே பிரசாரம் செய்ய வேண்டியதுதானே.
தலைவரே இந்த முடிவால் எங்கள் நெஞ்சு எரிகிறது. இதற்கு பருத்தி மூடை கோடவுனிலேயே இருந்திருக்கலாம். ஏன் அரசியலுக்கு வந்து எங்களை தலை குனியும்படி செய்கிறீர்கள். இவ்வாறு குமுறினர்.

