இது உங்கள் இடம்: காவல் துறையின் கண்ணியம் காப்பாற்றப்படுமா?
இது உங்கள் இடம்: காவல் துறையின் கண்ணியம் காப்பாற்றப்படுமா?
ADDED : மார் 12, 2024 12:25 AM

உலக, தேசிய, தமிழக நடப்புகள் குறித்து தினமலர் நாளிதழுக்கு வாசகர்கள் எழுதிய கடிதம்
குரு பங்கஜி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தமிழக மாணவர் மற்றும் இளைஞர்களை, போதை குழியில் தள்ளி நாசம் செய்யும், போதைப் பொருள் கடத்தலின் மூளையாக செயல்பட்ட, சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரன் ஜாபர் சாதிக், தமிழக காவல் துறைக்கு, 10 'சிசிடிவி' கேமராக்களை கொடுத்ததாகவும், அதற்காக அவருக்கு நினைவு பரிசு வழங்கப் பட்டதாகவும், தமிழக காவல் துறை டி.ஜி.பி சங்கர் ஜிவால் கூறியுள்ளது, வேதனையையும், அதிர்ச்சியையும் தந்துள்ளது.
அரசின் தவறுகளை சுட்டிக் காட்டும் ஊடக செய்தியாளர்களை, துரத்தி துரத்தி கைது செய்து, ஏதோ கொடும் குற்றம் செய்தது போல் அவர்களை, சிறையில் அடைக்கும் காவல் துறை, பெரும் குற்ற பின்னணி உடைய ஜாபர் சாதிக் போன்றவர்களின் உள்நோக்கத்தை ஆராயாமல், அவர்கள் கொடுக்கும் பொருள்களை அகமகிழ்வுடன் வாங்கி கொள்வதும், அவர்களுக்கு நினைவு பரிசை வழங்குவதும், எந்த வகையில் நியாயம், தர்மம்? இது, தேச விரோத குற்ற வாளிகளின் குற்ற செயல்களுக்கு, உறுதுணையாக அமைந்துவிடாதா?
சங்கர் ஜிவால், காவல் துறை தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவதாகவும், இருந்தும் சில குற்றவாளிகள், வெளிமாநிலங்களில் பதுங்கி விடுவதாகவும் கூறியுள்ளார். அப்படியானால், இதுவரை தமிழகத்தின் தலைநகர் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு, போதைப் பொருள் கடத்தல்களை செவ்வனே நடத்தி வந்த ஜாபர் சாதிக்கை கண்காணிக்காமல், அந்த பயங்கர குற்றவாளியை தப்பிக்கவும் விட்டது, யார் குற்றம்?
தற்போது, அவரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர், டில்லியில் கைது செய்துள்ளனர்.
இனியாவது தமிழக காவல் துறை, இதன் வாயிலாக பாடம் கற்று, நல்லவர்களை காக்கவும், தீயவர்களை ஒடுக்கவும் முனைப்புடன் செயலாற்றினால், தமிழக மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவர். போதை பொருட்களின் பிடியிலிருந்து தமிழகம் தப்பிக்கும். தமிழக காவல் துறையின் கண்ணியம், மானம், கப்பலேறாமல் காப்பாற்றப்படும்!

