பா.ம.க.,வுக்கு இரட்டை நாக்கா? அமைச்சர் எ.வ.வேலு கேள்வி!
பா.ம.க.,வுக்கு இரட்டை நாக்கா? அமைச்சர் எ.வ.வேலு கேள்வி!
ADDED : மார் 21, 2025 12:38 AM
சென்னை:''தர்மபுரியில் சிப்காட் அமைக்க கோரும் பா.ம.க.,வினர், திருவண்ணாமலையில் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பா.ம.க.,வுக்கு இரட்டை நாக்கா?'' என, பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு கேள்வி எழுப்பினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
பா.ம.க., - ஜி.கே.மணி: தர்மபுரியில் 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்திற்கும் தொழில் வளர்ச்சி வேண்டும்.
அமைச்சர் எ.வ.வேலு: தர்மபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்கிறார் ஜி.கே.மணி. அதில் எனக்கும் உடன்பாடு தான். ஆனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் அமைப்பதை, பா.ம.க., எதிர்க்கிறது. அக்கட்சிக்கு இரட்டை நாக்கா?
அமைச்சர் ராஜா: தொழில் துறைக்காக வாதாடிய பொதுப்பணி துறை அமைச்சருக்கு நன்றி. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை உறுதி செய்யும் பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன.
தர்மபுரியில் தொழில் பூங்கா அமைக்க, 1,733 ஏக்கர் நிலம் எடுக்கப்பட்டு, மூன்று நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மிக விரைவில் பெரிய நிறுவனங்கள் வரவுள்ளன. அங்கு கூடுதலாக 550 ஏக்கர் அரசு நிலங்கள் கண்டறியப்பட்டு, விரிவுப்படுத்தும் பணிக்கும் அடுத்தகட்டமாக அரசு சென்று விட்டது.
இவ்வாறு விவாதம் நடந்தது.

