பொய் கணக்கு காட்டுவதா? சுகாதார செவிலியர்கள் தர்ணா!
பொய் கணக்கு காட்டுவதா? சுகாதார செவிலியர்கள் தர்ணா!
ADDED : ஜூலை 25, 2025 01:11 AM

சென்னை:துணை ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள, 3,800 கிராம சுகாதார செவிலியர் காலியிடங்களை நிரப்பக்கோரி, தமிழக அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர், நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தை சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து, போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கூறியதாவது:
பொதுமக்கள் நலன் கருதி, உச்ச நீதிமன்ற வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து, 3,800க்கும் மேற்பட்ட கிராம சுகாதார செவிலியர்கள் காலிப்பணி இடங்களை நிரப்ப வேண்டும். கிராம சுகாதார செவிலியர்கள் செய்யும் பணிகளை, 'ஆன்லைனில்' மற்றொருவர் செய்வதாக, கணக்கு காட்டுவதை கைவிட வேண்டும்.
தடுப்பூசி மருந்துகள் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதற்கு அரசு உரிய தீர்வு காண வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான, வாட கையை மருத்துவ அலுவலர்களின் ஊதியத்தில் பிடிப்பதில்லை.
ஆனால், அரசு துணை சுகாதார நிலையங்களுக்கான, வாடகையை கிராம சுகாதார செவிலியர்கள் சம்பளத்தில் பிடிக்கின்றனர். இதை கைவிட வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராடி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

