இரும்பு மனிதர் இ.பி.எஸ்.,: கிருஷ்ணசாமி தந்தார் புது பட்டம்
இரும்பு மனிதர் இ.பி.எஸ்.,: கிருஷ்ணசாமி தந்தார் புது பட்டம்
ADDED : மார் 21, 2024 07:24 AM

சென்னை : ''தமிழகத்தில் மகத்தான கூட்டணி, இரும்பு மனிதர் இ.பி.எஸ்., தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் கூட்டணியை உருவாக்கி உள்ளோம்,'' என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், புதிய தமிழகம் கட்சி இடம் பெற்றிருப்பது, மிகவும் மகிழ்ச்சிகரமானது. தற்போது அகில இந்திய அளவில், தமிழகத்தில் ஆட்சியில் இருக்கக்கூடிய இரண்டு கட்சிகளுக்கும் எதிராக, ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலை உள்ளது.
எந்த கூட்டணியும் வெற்றி பெற வேண்டும் என்றால், மக்கள் மனநிலையை சரியாக கணக்கிட்டால் தான் வெற்றி பெற முடியும்.
கடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., 38 இடங்களில் வெற்றி பெற்றும், அவர்களின் செயல்பாடு சொல்லும்படி இல்லை. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அ.தி.மு.க., கூட்டணி மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும். இது மக்களுக்கான கூட்டணி.
புதிய தமிழகம் தேர்தல் கமிஷன் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடும். கட்சி நிர்வாகிகளுடன் பேசி, வேட்பாளரை தேர்வு செய்வோம். தமிழகத்தில் மகத்தான கூட்டணி, இரும்பு மனிதர் இ.பி.எஸ்., தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் கூட்டணியை உருவாக்கி உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

