ADDED : டிச 26, 2025 02:09 AM
சென்னை: 'திருவண்ணாமலையில் நாளை துவங்கும், வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில், விவசாயிகள், மாணவர்கள் பங்கேற்க வேண்டும்' என, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழக அரசின் வேளாண் துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடத்தப்படுகின்றன.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம், திருக்கோவிலுார் சாலையில் உள்ள, அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே, 'வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் - 2025' விழா நாளை துவங்குகிறது. இரண்டு நாட்கள் நடக்கும் கண்காட்சியை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
மேலும், 80,571 விவசாயிகளுக்கு, 669 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
கண்காட்சியில், வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகள், தங்களின் திட்டங்களை காட்சிப்படுத்துகின்றன.
கண்காட்சி மற்றும் கருத்தரங்கில், விவசாயிகள், மாணவர்கள், பொது மக்கள் பங்கேற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

