'டோக்கன்' வாங்கிய பின் பதிவுக்கு வராத பத்திரங்கள் குறித்து விசாரணை
'டோக்கன்' வாங்கிய பின் பதிவுக்கு வராத பத்திரங்கள் குறித்து விசாரணை
ADDED : செப் 14, 2025 04:43 AM

சென்னை: தமிழகத்தில், சொத்து விற்பனை குறித்த முடிவை இறுதி செய்தவர்கள், பதிவுத் துறை இணையதளத்தில் அது தொடர்பான விபரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
இதில் குறிப்பிட்ட அடிப்படை தகவல்கள் சரிபார்க்கப்பட்டு, அந்த பத்திரம் பதிவுக்கு ஏற்றதா என்பது முடிவு செய்யப்படும். இதன் அடிப்படையில், பதிவு கட்டணம், முத்திரை தீர்வை விபரங்கள் தெரிவிக்கப்படும்.
இதற்கான தொகைகளை, மனுதாரர் செலுத்திய பின், பத்திரத்தை பதிவு செய்வதற்கான நாள், நேரம் ஒதுக்கப்படும். இது தொடர்பான விபரங்கள் அடங்கிய, 'டோக்கன்' ஆன்லைன் முறையில் வழங்கப்படும்.
இதில் பெரும்பாலான சார் - பதிவாளர் அலுவலகங்களில் தினசரி, 100 டோக்கன்களும், அதிக பத்திரங்கள் பதிவாகும் அலுவலகங்களில், தினமும், 200 டோக்கன்களும் வழங்கப்படும்.
டோக்கன் பெற்றவர்கள், அதில் குறிப்பிட்ட வரிசை எண் அடிப்படையில், பத்திரங்களை பதிவு செய்ய வேண்டும்.
ஆனால், பல இடங்களில் நாளொன்றுக்கு, 40 டோக்கன்களுக்கு பத்திரம் வராததால், பதிவு செய்ய முடியாமல் போவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரிகள் திரட்டிய தகவல் அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட நாளில், செங்கல்பட்டு இரண்டாவது சார் - பதிவாளர் அலுவலகத்தில், 43; நாவலுாரில், 32; குன்றத்துாரில், 53 டோக்கன்கள் பயன் படுத்தாமல் இருந்தது தெரியவந்துள்ளது.
இது குறித்து, பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பத்திரங்களை பதிவு செய்ய தகுதி சரிபார்க்கப்பட்டு, கட்டணங்கள் செலுத்திய பின் தான் டோக்கன் அனுமதிக்கப்படுகிறது. அப்படி இருந்தும், அதிக எண்ணிக்கையில் டோக்கன்கள் பயன் படுத்தப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
இதற்கான காரணங்கள் குறித்து, சார் - பதிவாளர்களிடம் விபரம் கேட்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இது குறித்து விசாரணை நடத்த, மாவட்ட பதிவாளர்கள், டி.ஐ.ஜி.,க்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.