இன்ஸ்., கையெழுத்தை மோசடியாக பயன்படுத்திய 2 ஏட்டுகள் சஸ்பெண்ட்
இன்ஸ்., கையெழுத்தை மோசடியாக பயன்படுத்திய 2 ஏட்டுகள் சஸ்பெண்ட்
ADDED : செப் 24, 2024 05:53 AM

அச்சிறுபாக்கம் : அச்சிறுபாக்கம் பஜார் பகுதியில், மதுராந்தகம் மதுவிலக்கு காவல் நிலையம் இயங்கி வருகிறது. காவல் நிலையத்தில், மங்களப்ரியா என்பவர், இன்ஸ்பெக்டராக உள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், செய்யூர் அடுத்த கடப்பாக்கம் அருகே, சேம்புலிபுரம் கிராமத்தை சேர்ந்த குருசாமி, 60, என்பவரை, கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனையில் ஈடுபட்டதாக, மதுவிலக்கு போலீசார் கைது செய்து, அவரின் வங்கி கணக்கை முடக்கினர்.
சில தினங்களுக்கு முன் ஜாமினில் வந்த குருசாமி, தன் வங்கி கணக்கை விடுவிப்பது குறித்து இன்ஸ்பெக்டரிடம் விசாரித்தார், அப்போது, நீதிமன்றத்தை அணுகி வங்கி கணக்கை விடுவித்துக் கொள்ளுமாறு, இன்ஸ்பெக்டர் மங்களப்ரியா ஆலோசனை கூறியுள்ளார்.
ஆனால், நீதிமன்றத்தை அணுக விரும்பாத குருசாமி, மதுவிலக்கு காவல் நிலையத்தில் பணியாற்றி, தற்போது பணி மாறுதலால் கூவத்துார் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஏட்டு கோபிநாத், 38,திடம், வங்கி கணக்கை மீட்டுக் கொடுத்தால், 1.5 லட்சம் ரூபாய் தருவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, ஏட்டு கோபிநாத், தற்போது மதுவிலக்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ஏட்டு மணிகண்டன், 35, என்பவரை தொடர்பு கொண்டுள்ளார்.
அவர் வாயிலாக, மதுவிலக்கு இன்ஸ்பெக்டரின் முத்திரையை அனுமதியின்றி பயன்படுத்தி, இன்ஸ்பெக்டர் மங்களப்ரியாவின் கையெழுத்தை போலியாக போட்டு, வங்கி கணக்கை விடுவிப்பது குறித்து ஆணை தயார் செய்து, குருசாமியிடம் வழங்கியுள்ளார்.
ஆணையை பெற்றுக் கொண்ட குருசாமி, கடப்பாக்கத்தில் உள்ள இந்தியன் வங்கி மேலாளரிடம் வழங்கினார். கடிதத்தை ஆய்வு செய்த வங்கி மேலாளர், இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மங்களப்ரியாவை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்.
அப்போது, வங்கி கணக்கு விடுவிப்பது குறித்து, எந்த ஒரு கடிதமும் வழங்கவில்லை என கூறிய இன்ஸ்பெக்டர், கடிதம் குறித்து விசாரித்தார்.
அதில், கோபிநாத் மற்றும் மணிகண்டன் இருவரும், தன் கையெழுத்தை மோசடியாக பயன்படுத்தி, போலி ஆவணம் தயார் செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஏட்டுக்கள் கோபிநாத், மணிகண்டன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து, செங்கல்பட்டு மாவட்ட காவல் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

