'திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்றமுடியலைன்னு வருத்தப்பட்டாரே'; தீக்குளித்த பூர்ணசந்திரனின் மனைவி இந்துமதி கதறல்
'திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்றமுடியலைன்னு வருத்தப்பட்டாரே'; தீக்குளித்த பூர்ணசந்திரனின் மனைவி இந்துமதி கதறல்
UPDATED : டிச 20, 2025 07:49 AM
ADDED : டிச 20, 2025 05:16 AM

மதுரை: ''திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றமுடியலை என்று ஒருவாரமாக புலம்பிக் கொண்டிருந்தார். தீக்குளித்து இறப்பார்னு நினைக்கலயே' என்று, மதுரையில் நேற்று முன்தினம் தீக்குளித்து இறந்த நரிமேட்டைச் சேர்ந்த பூர்ணசந்திரனின் மனைவி இந்துமதி 29, கதறினார்.
மதுரை மாநகராட்சி அலுவலகம் அருகில் இருந்த ஆளில்லாத போலீஸ் பூத்திற்குள் நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு சென்ற பூர்ணசந்திரன், பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து இறந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடந்தது. அப்போது பூர்ணசந்திரனின் மனைவி இந்துமதியிடம் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன், துக்கம் விசாரித்த போது 'இப்படி ஆகும்னு நினைக்கலயே சார்' என்றபடி கதறினார்.
இந்துமதி கூறியதாவது:
திருப்பரங்குன்றம், திருவண்ணாமலை, சதுரகிரி மலைகளுக்கு கணவர் அடிக்கடி செல்வார். திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிவிட்டனர்; திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் தீபம் ஏற்ற முடியவில்லையே... மனசுக்கு கஷ்டமா இருக்கு என வேதனையில் புலம்பிக் கொண்டே இருந்தார். மறுநாள் விளக்கு வைக்கும் போது புலம்பினார். தீர்ப்பு சாதகமாக வரும் என ஆறுதல் கூறினேன். 'ஒரு வாரமாக 'இப்படியாச்சே... இப்படியாச்சே' என்று வருத்தப்பட்டுக் கொண்டே இருந்தார். தீக்குளித்து இறப்பார்னு நினைச்சு கூட பார்க்கலயே.
சிவபக்தர் அவர். மாதத்தில் 3 முறையாவது சதுரகிரி சென்று சிவனைத் தரிசிப்பார். மகனுக்கும் சிவனேசன் என பெயர் வைத்தார். இவ்வாறு கூறி கதறி அழுதார்.
20.5 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் ஹிந்து மக்கள் கட்சி தலைவர் ராமரவிக்குமார் கலெக்டரிடம் அளித்துள்ள மனு: திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இன்று வரை அமலில் உள்ளது. அதை செயல்படுத்துவதற்குப் பதிலாக, நீதிமன்ற உத்தரவை செயலிழக்கச் செய்யும் விதம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சட்டமீறலின் நேரடி மற்றும் அவமதிப்பு விளைவாக 35 வயதுள்ள பூர்ணசந்திரன் உயிரை மாய்த்துக் கொண்டார். அவரை சார்ந்து மனைவி, 6 வயது மகன் உள்ளனர்.
உயர்நீதிமன்ற உத்தரவை திட்டமிட்டு மீறும் சூழலில் அரசும், தவறிழைத்த அதிகாரிகளும் பொது சட்ட இழப்பீடு வழங்க கடமைப்பட்டவர்கள். உச்சநீதிமன்றத்தின் சில முந்தைய தீர்ப்பின் அடிப்படையில் மறைந்தவர் மொத்த இழப்பீடு ரூ.20 லட்சத்து 50 ஆயிரம் பெற உரிமையுள்ளவர். எனவே அரசியலமைப்பு சட்டமீறலக்கான பொது சட்ட இழப்பீடாக மறைந்த பூர்ணசந்திரனின் சட்ட வாரிசுகளுக்கு அந்த தொகையை வழங்க வேண்டும்.
நீதிமன்ற உத்தரவை நீர்த்துப் போக செய்யும் நோக்கில் பயன்படுத்திய கலெக்டர் தனது அதிகார வரம்பை மீறி செயல்பட்டதன் மூலம், தனிப்பட்ட பொறுப்பை ஏற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. போலீஸ் அதிகாரிகள் இருவரும் (கமிஷனர், துணை கமிஷனர்), நீதிமன்ற உத்தரவை உறுதி செய்யத் தவறியிருப்பதால் சட்டமீறலுக்கான இணைப் பொறுப்பாளராக கருதப்படுவர். எனவே மேற்படி தொகையை மூவரும் கூட்டாகவோ, தனித்தனியாகவோ அளிக்க கடமைப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கெடுபிடி காட்டும் அரசு: ராம சீனிவாசன் பூர்ணசந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்த மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்த ராம சீனிவாசன் பேசியதாவது :
பூர்ணசந்திரன் தியாகம் துரதிர்ஷ்டவசமானது. தர்மத்திற்காக வாழவேண்டுமே தவிர சாகிறேன் என்பதை பா.ஜ. ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. மனைவி, குழந்தைகள், பெற்றோர், உறவினர்களைப் பற்றி பொருட்படுத்தாமல் தமிழகத்தில் இப்படி ஒருவர் முடிவெடுத்திருக்கிறார் என்பது அதிர்ச்சியாக உள்ளது.
2026ல் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என அவரது ஆடியோ பதிவில் மிகத் தீர்க்கமாக பேசியுள்ளது தெரிகிறது. சில நிமிடங்களில் சாகப்போகிறோம் என்ற அச்சம் கூட அவரது குரலில் தெரியவில்லை. இறப்பைத் தவிர்த்திருக்கலாம் என்பது தான் எங்கள் ஆதங்கம்.
இதுபோன்ற நிகழ்வுகள் இனி தமிழகத்தில் நடக்கக்கூடாது. தலைவர்கள் கைதாகும் போதும், ஈழத்தமிழர் பிரச்னையின் போதும், நீட் தேர்வு எதிரொலியாகவும் தீக்குளிப்பு, தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதுபோன்ற சம்பவங்களுக்கு வருத்தப்படுவதும் அதற்காக அஞ்சலி செலுத்துவதும் வழக்கமான நடைமுறை தான். அதற்காக தமிழக அரசு இவ்வளவு கெடுபிடி காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
அரசு பொறுப்பேற்க வேண்டும் பூர்ணசந்திரன் உடலுக்கு நேற்று பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம், ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
பா.ஜ., -ஹிந்து முன்னணி சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை பூர்ணசந்திரன் மனைவி இந்துமதியிடம் நயினார் நாகேந்திரன் வழங்கினார்.
பா.ஜ., ஹிந்து முன்னணி, ஹிந்து மக்கள் கட்சி தொண்டர்கள் வாயில் கருப்புத்துணி கட்டி பூர்ணசந்திரன் இறுதி ஊர்வலத்தின் போது கலந்து கொண்டனர்.
நயினார் நாகேந்திரன் பேசியதாவது:
இவரது மறைவுக்கு முழுமையாக தி.மு.க., அரசே பொறுப்பேற்க வேண்டும். இனிமேலாவது திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். பூர்ணசந்திரனின் மனைவிக்கு அரசு வேலையும், குடும்பத்திற்கு ரூ.ஒருகோடியும் அரசு வழங்க வேண்டும்.
கடவுளே இல்லை என்று சொன்னவருடைய சிலைக்கு பின்னாலேயே உயிரை மாய்த்துக் கொள்கிறேன் என்று ஆடியோவில் பதிவிட்டு இறந்தார் என்றால், அதில் எவ்வளவு அர்த்தம் அடங்கியுள்ளது என்பதை முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இனிமேலாவது முதல்வர் இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி கார்த்திகை தீபமேற்ற அனுமதிக்க வேண்டும் என்றார்.
அர்ஜூன் சம்பத் மறியல் பிரேத பரிசோதனைக்குப் பின் பூர்ணசந்திரனின் உடலை வாகனத்தில் ஏற்றும் போது ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன்சம்பத், பார்வர்டு பிளாக் முருகன்ஜி உட்பட தொண்டர்கள் வாகனத்தின் முன்பாக மார்ச்சுவரி தரையில் அமர்ந்து மறியல் செய்தனர். 'திருப்பரங்குன்றம் மலையில் தீபமேற்ற அனுமதிக்க வேண்டும் ' எனவும் உடலை எடுக்கக்கூடாது என்றும் கோஷமிட்டனர். அவரது குடும்பத்தினர் மறியல் செய்ய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்ததும் எழுந்தனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
கரூர் தொழிலதிபர் ரூ.10 லட்சம் நிவாரணம் பூர்ணசந்திரன் குடும்பத்திற்கு கரூரைச் சேர்ந்த 'ஷோபிகா இம்பெக்ஸ்' என்ற நிறுவனம் ரூ.10 லட்சம் வழங்கியது. அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சிவசாமி, மேலாளர் பழனியப்பன் நேற்று மதுரை வந்து பூர்ணசந்திரன் மனைவியிடம் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.
பூர்ணசந்திரன் குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளதால், சமூக ஊடகங்களில் பலர் அவரது மனைவியின் படத்துடன் வங்கி கணக்கு எண்ணை குறிப்பிட்டு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற தகவலை வைரலாக்கி வருகின்றனர்.

