டீத்துாளில் கலப்படம் அதிகரிப்பு; வீட்டில் பரிசோதிக்க அறிவுறுத்தல்
டீத்துாளில் கலப்படம் அதிகரிப்பு; வீட்டில் பரிசோதிக்க அறிவுறுத்தல்
ADDED : டிச 25, 2025 05:57 AM

சென்னை: 'கலப்பட டீத்துாள் விற்பனை அதிகரித்து வருவதால், அவற்றை வீட்டிலேயே பரிசோதித்து, புற்றுநோய் அபாயத்தை தவிர்க்க வேண்டும்' என, உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தி உள்ளது.
டீ நல்ல நிறத்திலும், வாசனையுடனும் இருந்தால் மட்டுமே, தரமிக்க டீத்துாள் என, பலர் நம்புகின்றனர். இவற்றை பயன்படுத்தி, சிலர் டீத்துாளில் நிறமிகள் வாயிலாக, செயற்கை நிறம் ஏற்றுவது, ரசாயனங்கள் வாயிலாக, வாசனை சேர்ப்பது உள்ளிட்ட மோசடிகளை செய்கின்றனர்.
இவ்வாறு ரசாயனம் கலந்த டீயை பருகி வருவோருக்கு, புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது என, உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகம் முழுதும், குறிப்பாக கிராமப்புறங்களில், கலப்பட டீத்துாள் விற்பனை அதிகரித்துள்ளது. அவ்வப்போது அவற்றை கண்டறிந்து, நடவடிக்கை எடுத்தாலும், தொடர்ந்து கலப்பட டீத்துாளை, சந்தையில் இருந்து வெளியேற்றுவது சிரமமாக உள்ளது. எனவே, கலப்பட டீத்துாள் குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
கலப்பட டீத்துாளில், தொடர்ச்சியாக டீ பருகுவோருக்கு, புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், கல்லீரல், சிறுநீரக கோளாறுகள், வயிற்று கோளாறுகள் மற்றும் அஜீரண பாதிப்பு ஏற்படும்.
வீடு மற்றும் கடைகளுக்கு வாங்கும் டீத்துாள் பாக்கெட்டை பிரிக்கும்போது, ஒரு சிட்டிகை டீத்துாள் வாயிலாக, அது கலப்படமா இல்லையா என்பதை அறியலாம். அதாவது, கண்ணாடி டம்ளரில் குடிநீரை எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் அளவு டீத்துாளை சேர்க்க வேண்டும்.
கலப்படம் இல்லாத டீத்துாளாக இருந்தால், நீரில் எவ்விதமான நிற மாற்றமும் ஏற்படாது. செயற்கை நிறமி சேர்க்கப்பட்ட டீத்துாளாக இருந்தால், தண்ணீர் ஆரஞ்சு கலந்த சிவப்பு நிறமாக மாறிவிடும். அவ்வாறான டீத்துாளை தவிர்ப்பதுடன், உணவு பாதுகாப்பு துறையிலும் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

