17 மாடி கட்டடத்தை இடிக்க முடிவு: ஐ.ஐ.டி., அறிக்கைப்படி நடவடிக்கை
17 மாடி கட்டடத்தை இடிக்க முடிவு: ஐ.ஐ.டி., அறிக்கைப்படி நடவடிக்கை
ADDED : பிப் 05, 2024 06:36 AM

சென்னை: 'சென்னை சாலிகிராமத்தில் இடிந்து விழும் அபாயத்தில் உள்ள, 17 மாடி குடியிருப்பு கட்டடத்தை இடித்து புதிதாக கட்டலாம்' என்ற ஐ.ஐ.டி., குழு பரிந்துரையை ஏற்க, தனியார் கட்டுமான நிறுவனம் முன்வந்துள்ளது.
சாலிகிராமத்தில் 4.65 ஏக்கர் நிலத்தில், 'ஜெயின் வெஸ்ட் மினிஸ்டர்' என்ற பெயரில், 17 மாடிகுடியிருப்பு கட்டடம் கட்டப்பட்டது. இங்கு, 630 வீடுகள் கட்டப்பட்டன; 490 வீடுகளில் மக்கள் குடியேறினர்.
சில ஆண்டுகளாக, இந்த கட்டடத்தில்பல்வேறு குறைபாடுகள் இருப்பது தெரியவந்தது. இங்கு பெரும்பாலான பிளாக்குகளில், சுவரில் மேற்பூச்சு பெயர்ந்து விழுகிறது. கம்பிகளில் துரு ஏறியதால் இந்த பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான வழக்கில், சீரமைப்பு பணிக்கு 2 கோடி ரூபாய் செலவாகும் என, ஐ.ஐ.டி., வல்லுனர் குழு பரிந்துரைத்தது. இதை, கட்டுமான நிறுவனம் ஏற்கவில்லை. அதே நேரம், சீரமைப்பு பணிக்கு மாற்று வழியும் பரிந்துரைக்கப்பட்டது.
இதில், பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களின் தொடர் போராட்டம் காரணமாக, மீண்டும் ஐ.ஐ.டி., வல்லுனர் குழு பரிந்துரை பெற சி.எம்.டி.ஏ., உத்தரவிட்டது.
இதன்படி, சென்னை ஐ.ஐ.டி., வல்லுனர் குழு, ஜெயின் வெஸ்ட்மினிஸ்டர் குடியிருப்புகட்டடத்தின் தரத்தை ஆய்வு செய்தது.
இது தொடர்பான அறிக்கையில், ஸ்திரத்தன்மை பாதிப்பு தெரிய வந்துள்ளதால், கட்டடத்தை இடித்து, புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டலாம் என பரிந்துரைசெய்யப்பட்டுள்ளது.
வல்லுனர் குழுவின் இந்த பரிந்துரையை, ஜெயின் கட்டுமான நிறுவனம் ஏற்று, பழைய கட்டடத்தை இடித்து, புதிய கட்டடம் கட்ட ஒப்புக் கொண்டுள்ளது. இதனால், அடுத்த சில மாதங்களில் இந்த வளாகத்தில் பழைய குடியிருப்பு இடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
புதிய கட்டடத்துக்கு சி.எம்.டி.ஏ., ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கையை கட்டுமான நிறுவனம் துவங்க உள்ளது. ஐ.ஐ.டி., குழு பரிந்துரை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் முன், வீடு வாங்கியவர்களிடம் ஒப்புதல் பெற வேண்டியது கட்டாயம்.
புதிய கட்டட பணிகள் முடியும் வரை, ஏற்கனவே வீடு வாங்கியவர்களுக்கான மாற்று வழிகள் செய்ய வேண்டிய அவசிய மும் ஏற்பட்டுள்ளது.

