தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி செல்லாது என உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு
தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி செல்லாது என உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு
ADDED : ஜன 10, 2024 03:48 AM

சென்னை : 'கூட்டணி கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது' என, அறிவிக்கக் கோரிய வழக்கில், தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர், எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனு:
கடந்த 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், விழுப்புரம், நாமக்கல், ஈரோடு, பெரம்பலுார் ஆகிய தொகுதிகளில், தி.மு.க., வேட்பாளர்களை நிறுத்தியது. தென்காசி தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளரை நிறுத்தியது.
இந்த தொகுதிகளில் போட்டியிட்டவர்கள், தங்கள் கட்சிகளை சேர்ந்தவர்கள் எனவும், மற்ற அரசியல் கட்சிகளில் அவர்கள் உறுப்பினர்கள் அல்ல என்றும் தெரிவித்தது.
விழுப்புரம் தொகுதியில், தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்ட ரவிகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலர். நாமக்கல் தொகுதியில் தி.மு.க., நிறுத்திய வேட்பாளர் சின்னராஜ், கொங்கு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகி.
ஈரோடு தொகுதியில் தி.மு.க., நிறுத்திய வேட்பாளர் கணேசமூர்த்தி, ம.தி.மு.க., மாவட்ட செயலர். பெரம்பலுார் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் பாரிவேந்தர், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர். தென்காசி தொகுதியில் அ.தி.மு.க., நிறுத்திய வேட்பாளர் கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சியின் தலைவர்.
இந்த தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தி.மு.க.,விலும், அ.தி.மு.க.,விலும் உறுப்பினர்களாக இல்லை. ஆனால், இவர்களை தங்கள் கட்சி உறுப்பினர்கள் என அறிவித்து, வேட்பாளர்களுக்கான படிவங்களை வழங்கியது, சட்டத்துக்கு முரணானது; வாக்காளர்களை ஏமாற்றுவது போலாகும். ஒரு அரசியல் கட்சியில் உறுப்பினராக இருப்பவர், அடுத்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது.
எனவே, ரவிகுமார், சின்னராஜ், கணேசமூர்த்தி, பாரிவேந்தர், கிருஷ்ணசாமி ஆகியோர் சமர்பித்த பி - படிவத்தை ஏற்றது சட்டவிரோதம் எனவும், நான்கு பேரின் தேர்தல் முடிவுகளை செல்லாது என்றும் அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டது.
மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. 'அரசியலமைப்பு சட்டப்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி., - எம்.எல்.ஏ., தேர்தலை எதிர்த்து, தேர்தல் வழக்கு தான் தொடர முடியும். இரண்டு கட்சிகளில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனரா என்ற கேள்வியை, இந்த வழக்கில் முடிவு செய்ய முடியாது' என்றும், முதல் பெஞ்ச் தெரிவித்தது. வழக்கு விசாரணையையும் முடித்து வைத்தது.

