இதற்குமேல் அழுவதற்கு கண்ணீரே இல்லை ; சி.பி.ஐ., யிடம் எல்லாமே சொல்லி விட்டேன் 6 மணி நேர விசாரணைக்கு பின் பேராசிரியை நிகிதா பேட்டி
இதற்குமேல் அழுவதற்கு கண்ணீரே இல்லை ; சி.பி.ஐ., யிடம் எல்லாமே சொல்லி விட்டேன் 6 மணி நேர விசாரணைக்கு பின் பேராசிரியை நிகிதா பேட்டி
ADDED : ஜூலை 30, 2025 12:36 AM

மதுரை: அஜித்குமார் கொலை வழக்கில் மடப்புரம் கோயிலில் காரில் வைத்த நகை காணாமல் போனதாக புகாரளித்த மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிகிதா மற்றும் அவரது தாயாரிடமும் டி.எஸ்.பி., மோஹித்குமார் தலைமையிலான குழுவினர் 6 மணி நேர விசாரணை நடத்தினர்.
இரண்டாவது முறையாக சி.பி.ஐ., அதிகாரிகள் சம்மன் அனுப்பிய நிலையில், நிகிதா, அவரது தாயார் சிவகாமி இருவரும் மதுரை ஆத்திகுளம் சி.பி.ஐ., அலுவலகத்தில் ஆஜராகினர். 6 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணையில், ஜூன் 27 ஆம் தேதியன்று நிகிதா அவரது தாயாருடன் எங்கெங்கு சென்றார்,
மருத்துவமனைக்கு சென்றார்களா. நகையை எந்த இடத்தில் வைத்து கழற்றினார்கள், எந்தெந்த வகையிலான நகைகள், ரசீது, நகை காருக்குள் வைக்கப்பட்ட இடம், அஜித்குமாரிடம் பேசியது குறித்தும், காலையில் கோயிலில் நடந்தது முதல் மாலையில் திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷன் அஜித்குமாரை அழைத்து சென்ற வரையிலான சம்பவங்கள் குறித்தும் விசாரணை நடத்தினர்.
நிகிதாவிற்கு வந்த செல்போன் அழைப்புகள் குறித்தும் கேள்விகளை எழுப்பினர்.
விசாரணை முடிந்து புறப்பட்ட நிகிதா நிருபர்களிடம் கூறியதாவது:
என்னைப் பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். நடந்த உண்மைகளை சி.பி.ஐ., அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். மீண்டும் விசாரணைக்கு அழைத்தாலும் வருவேன்.
புகார் மட்டுமே கொடுத்தேன். அதன்பிறகு என்ன நடந்தது என்னவென்று தெரியாது. அஜித்குமார் இறந்ததற்கு வருத்தப்படுகிறேன். இதற்குமேல் அழுவதற்கு கண்ணீரே இல்லை; வேதனையாக உள்ளது. சரிவர சாப்பிட முடிவதில்லை. காய்கறி, பெட்ரோல் போட போக முடியவில்லை. கல்லூரி செல்லவில்லை. மக்கள் ஒருபுறம் மட்டுமே பேசுவது வருத்தமாக உள்ளது. இவ்வாறு கூறினார்.

