வழக்கு ஆவணமே மாயமானால் சிலை எப்படி பாதுகாக்கப்படும்? ஹிந்து முன்னணி கேள்வி
வழக்கு ஆவணமே மாயமானால் சிலை எப்படி பாதுகாக்கப்படும்? ஹிந்து முன்னணி கேள்வி
ADDED : டிச 23, 2024 06:20 AM

திருப்பூர் : 'கோவில் சிலை திருட்டு வழக்கு ஆவணங்களை கூட பாதுகாக்க முடியாவிட்டால், கோவில் சிலைகளை தமிழக அரசும், போலீஸ் துறையும் எவ்வாறு பாதுகாக்கும்' என, ஹிந்து முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.
அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
தமிழகத்தில், 300 கோடி ரூபாய் மதிப்பிலான, 41 சிலைகளை கடத்தி சென்ற வழக்குகளின் ஆவணங்கள், போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்து காணாமல் போயுள்ளன. இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசை கண்டித்ததுடன் மட்டுமல்லாமல், தமிழக உள்துறை செயலர் நேரில் ஆஜராக வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிலைகளை கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ள தமிழக அரசும், போலீஸ் துறையும், இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அறநிலையத்துறை அதிகாரிகளும் மெத்தனமாக உள்ளனர். இதை விட, வழக்குகளின் ஆவணங்கள் போலீஸ் ஸ்டேஷன்களிலேயே காணாமல் போயுள்ளன என்ற, அவலம் அரங்கேறி இருப்பது வருத்தத்துக்குரிய விஷயம்.
தமிழக அரசாலும், போலீஸ் துறையாலும், வழக்கு ஆவணங்களையே பாதுகாக்க முடியவில்லை என்றால், எப்படி கோவில்களும், சிலைகளும் பாதுகாக்கப்படும்? சிலை திருட்டு வழக்கு தொடர்பான ஆவணங்களை பாதுகாக்க தவறிய, போலீஸ் அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மெத்தனமாக இருந்த தமிழக அரசையும், அறநிலைய துறையையும் கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

