தொகுதிக்கு என்ன செய்வீர்கள் ?: தி.மு.க., அ.தி.மு.க.,வில் நேர்காணல் விறுவிறு
தொகுதிக்கு என்ன செய்வீர்கள் ?: தி.மு.க., அ.தி.மு.க.,வில் நேர்காணல் விறுவிறு
UPDATED : மார் 10, 2024 12:04 PM
ADDED : மார் 10, 2024 11:19 AM

சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், விருப்ப மனு அளித்தவர்களிடம் தி.மு.க., அ.தி.மு.க., சார்பில் நேர்காணல் இன்று அந்தந்த கட்சி தலைமை அலுவலகங்களில் நடந்தது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.
தி.மு.க., கூட்டணியில் நேற்று தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது. தி.மு.க., 21 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அக்கட்சி சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் கடந்த 1 முதல் 7 ம் தேதி வரை விருப்ப மனு அளித்தனர். சுமார் 2 ஆயிரம் பேர் விருப்ப மனு அளித்தனர்.
முதல்வர் ஸ்டாலின் கேள்வி
அவர்களிடம், தி.மு.க.,வின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வருகிறார். தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து கேட்டறிந்தார். நேர்காணலில், துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் உடனிருந்தனர்.
திமுக தரப்பில் நடந்த நேர்காணலில் நடப்பு எம்பிக்களிடம் இதுவரை என்ன திட்டங்கள் செயல்படுத்தியுள்ளீர்கள், இன்னும் என்ன திட்டங்கள் உள்ளது. தொகுதிக்கு என்ன செய்ய போகிறீ்ர்கள் ? தேர்தல் செலவு, சாதிவாரியான ஓட்டுக்கள் , கட்சிக்காக உழைத்த பணிகள் என்ன உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
ஸ்ரீ பெரும்புதூர் தொகுதியில் அமைச்சர் தா.மு.அன்பரசன் மகன் மாறன், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த படப்பை மனோகரன், திமுக பொதுக்குழு உறுப்பினர் எத்திராஜ் ஆகியோர் நேர்காணலில் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி தொகுதியில் 7 பேரும், தர்மபுரியில் 24 பேரும், பொள்ளாச்சியில் 15 பேரும் நேர்காணலில் கலந்து கொண்டனர்.
கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு விருப்ப மனு அளித்த 21 பேருக்கு நேர்காணல் நடைபெற்றது. இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜன், திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் மகேந்திரன் , மாவட்ட செயலாளர் முருகேசன், வழக்கறிஞர் அருள்மொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுவரை கன்னியாகுமரி, தர்மபுரி, கடலூர், திருப்பூர், ஈரோடு , சேலம் ,பொள்ளாச்சி ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கு விருப்பம் தெரிவித்தவர்களுக்கான நேர்காணல் முடிவடைந்துள்ளது.
அ.தி.மு.க.,
அ.தி.மு.க., சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள், பிப்.,21 முதல் மார்ச் 6 வரை விருப்ப மனு தாக்கல் செய்தனர். 2,475 பேர் விருப்ப மனுக்கள் பெற்றனர்கள். சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், அவர்களிடம், பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., மற்றும் மூத்த நிர்வாகிகள் நேர்காணல் நடத்தினர்.
20 தொகுதிகளுக்கான நேர்காணல் இன்று நடக்கிறது. திருவள்ளூர்(தனி) வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை ஆகிய தொகுதிகளுக்கு இன்று நேர்காணல் நடக்கிறது.

