விழுப்புரத்தை கைப்பற்ற வச்ச குறி தப்பியது எப்படி? வேலு 'அப்செட்'
விழுப்புரத்தை கைப்பற்ற வச்ச குறி தப்பியது எப்படி? வேலு 'அப்செட்'
ADDED : மே 20, 2025 07:04 AM

விழுப்புரம் மாவட்டத்தையும் கைப்பற்ற அமைச்சர் வேலு வைத்த குறி தப்பியது எப்படி என்ற விவாதம் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.
எம்.ஜி.ஆர்., கட்சி தொடங்கிய போது அ.தி.மு.க.,வில் இணைந்தவர் அமைச்சர் வேலு. இவர் அப்போது, அமைச்சராக இருந்த ப.உ.சண்முகத்திடம் உதவியாளராக சேர்ந்தார். இதன் காரணமாக தண்டராம்பட்டு தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைத்து, வெற்றி பெற்றார்.
எம்.ஜி.ஆர்., மறைவுக்குப்பின், தனது தொலை நோக்கு பார்வையால் பொன்முடி மூலம் தி.மு.க.,வில் இணைந்தார். 2006ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க., சார்பில் தண்டராம்பட்டு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ., ஆனதுடன் உணவுத்துறை அமைச்சராகவும் ஆனார்.
கிடைத்த வாய்ப்பை கனகச்சிதமாக பொருத்திக் கொள்ளும் அசாத்திய திறமை படைத்தவர் தற்போது தி.மு.க., வில் இரண்டாம் கட்ட தலைவர்கள் வரிசையில் இருக்கும் அவர் முதல் இடத்தை பிடிக்க காயை நகர்த்தி வருகிறார்.
திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமல்ல திருப்பத்துாருக்கும் பொறுப்பு அமைச்சரானார். பக்கத்து மாவட்டமான கள்ளக்குறிச்சியை எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனை ஆளாக்கி பொன்முடியை அங்கிருந்து அகற்றிவிட்டு தன் வசப்படுத்திக் கொண்டார்.
அரசியலில் அடுத்தடுத்து சறுக்கல்களை சந்தித்து வரும் பொன்முடியின் மாவட்டத்தை கைப்பற்றவும் முடிவு செய்தார்.
அதன்படி, கட்சித் தலைமையில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளி வரும் முன்பாகவே லட்சுமணன் எம்.எல்.ஏ., மூலம் வேலு விழுப்புரத்திற்கும் சேர்த்து நான்தான் தேர்தல் மண்டல பொறுப்பாளர், என்ற நோக்கில் பேனர் மற்றும் விளம்பரங்களில் தனது படத்தை வேலு தரப்பு இடம்பெறச் செய்தது.
ஊட்டியில் இருந்து ஊர் திரும்பிய முதல்வரிடம், பொன்முடி தரப்பினர் வேலுவின் செயல்பாட்டை விளக்கியதால் கடுப்பான கட்சி தலைமை வேலுவின் மண்டல பொறுப்பில் இருந்து விழுப்புரத்தை நீக்கியது. வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் கடலுார் கிழக்கு, விழுப்புரம், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க.வில் அசைக்க முடியாத தலைவராக இருந்த பொன்முடி சமீப காலமாக ஓரம் கட்டப்பட்டு வந்தாலும், கட்சித் தலைமை அவரை முழுமையாக ஒதுக்க தயாராக இல்லை என கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
பக்கத்து மாவட்டமான விழுப்புரத்திற்கும் பொறுப்பு அமைச்சராகி விடலாம் என்ற நோக்கில் காய் நகர்த்தி தோல்வியில் முடிந்ததால் அதற்கான காரணத்தை வேலுவின் முகாந்திரம் ஆராயத் தொடங்கியுள்ளது.

