37 ஆண்டு பணிக்கு கவுரவம்; குடும்பத்தினர் செயலால் அரசு பஸ் டிரைவர் நெகிழ்ச்சி
37 ஆண்டு பணிக்கு கவுரவம்; குடும்பத்தினர் செயலால் அரசு பஸ் டிரைவர் நெகிழ்ச்சி
UPDATED : அக் 07, 2024 03:39 PM
ADDED : அக் 07, 2024 02:00 PM

திருப்பூர்: அரசு பஸ் டிரைவராக பணியாற்றி, ஓய்வு பெற்ற தந்தைக்கு மகனும், மகளும் மொபைல்போன், வாட்ச் வழங்கி, சந்தன மாலை அணிவித்து வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
கோபி, வலையபாளையம் பகுதியை சேர்ந்தவர், முருகன், 59. அரசு போக்குவரத்து கழகத்தில், 37 ஆண்டுகள் பணியாற்றி திருப்பூர் கிளையில் இருந்து செப்., 30 ல், ஓய்வு பெற்றார். ஓய்வு பெறும் நாளை விழாவாக கொண்டாட முடிவு செய்த குடும்பத்தினர், டிப்போ அதிகாரிகளிடம் ஒப்புதல் கேட்டு பெற்றனர்.
ஓய்வு நாளான்று காலை, டிப்போவில் உள்ள கோவிலில் குடும்பத்தினர் பூஜை செய்தனர். பிறகு, கேக் வெட்டி, டிப்போ ஊழியர்களுக்கு வழங்கினர். முருகனுக்கு இன்ப அதிர்ச்சி வழங்கும் வகையில் மகன் வசந்தகுமார் புதிய மொபைல் போனையும், மகள் திவ்யா தங்க வாட்ச்சையும் பரிசாக வழங்கினர். மனைவி விமலா, திருஷ்டி சுற்றிப் போட்டார்.
குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை, தான் ஓட்டிய பஸ்சில் அமர வைத்து டிப்போவுக்கு உள்ளேயே ஒரு முறை முருகன் சுற்றி வந்தார். பிறகு அவருக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பொன்னாடை, சந்தானமாலை அணிவித்து வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
முருகன் கூறுகையில்,' 1986ல் சத்தியமங்கலத்தில் பணியில் சேர்ந்தேன். அரசு பஸ் டிரைவராக பணியாற்றுவது சவால் மிகுந்த பொறுப்பு. 37 ஆண்டு பணியாற்றி ஓய்வு பெறுவது திருப்தியளிக்கிறது. குடும்பத்தினர் செய்த ஏற்பாடு எதிர்பார்க்காதது. போக்குவரத்து அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,' என்றார்.

