இந்து முன்னணி நிர்வாகி குற்றாலநாதன் ஜாமினில் விடுவிப்பு
இந்து முன்னணி நிர்வாகி குற்றாலநாதன் ஜாமினில் விடுவிப்பு
UPDATED : ஜன 05, 2025 07:35 PM
ADDED : ஜன 05, 2025 04:12 PM

திருநெல்வேலி: நெல்லையில் கைதான இந்து முன்னணி நிர்வாகி குற்றாலநாதனை, ரிமாண்ட் செய்ய மறுத்த நீதிபதி, போலீசாருக்கு கேள்விகளை எழுப்பினார். இதனையடுத்து குற்றலாநாதன் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
நெல்லையில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த நவம்பர் மாதம் 31 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. பிறகு, டாக்டர்கள் அந்த பெண்ணுக்கு தெரியாமலேயே காப்பர் டி என்ற கருத்தடை சாதனத்தை பொருத்தியதாக கூறப்படுகிறது.
இதனை, அந்த பெண் வீட்டிற்கு செல்லும்போது கூறியுள்ளனர். கருத்தடை சாதனம் பொருத்தப்பட்டதால், ஒவ்வாமை உண்டாகி ரத்தப்போக்கு ஏற்பட்டு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதற்கு ஹிந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்தது முன் அனுமதி பெறாமல் இப்படிச் செய்த டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், அந்த பெண்ணுக்கு நஷ்ட ஈடு அளிக்க வேண்டும் என நெல்லை மண்டல பொது சுகாதாரத்துறை இயக்குநரிடம் ஹிந்து முன்னணி மாநில செயலர் குற்றாலநாதன் மனு அளித்தார்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஹிந்து பெண்களுக்கு சம்மதம் இல்லாமல் கருத்தடை சாதனம் பொருத்தப்படுவதாகவும், அந்த பெண்ணுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இந்த அறிக்கையை சமூக வலைதளத்தில் வெளியிட்டதற்காக, குற்றாலநாதனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மறுப்பு
கைது செய்து கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட குற்றால நாதனை ரிமாண்ட் செய்ய முடியாது எனவும் இந்த விவகாரத்தில் டாக்டர்கள் மீது ஏன் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என நீதிபதி சத்யா கேள்வி எழுப்பினார்.புகார் கொடுக்க வந்த குற்றால நாதனை கைது செய்தால், அவர் புகார் கொடுத்த மருத்துவரை மட்டும் நீங்கள் ஏன் கைது செய்யவில்லை என்வும் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, இளம் பெண் தந்த புகாரின் பேரில் டாக்டர்கள் மீது வழக்கு பதிவு செய்ய சிஎஸ்ஆர் தந்தனர்.
இந்நிலையில், குற்றாலநாதன் சொந்த ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
ஆர்ப்பாட்டம்
இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் கைது செய்யப்பட்டதை கண்டித்து போலீஸ் ஸ்டேஷன் முன்பு நெல்லை வக்கீல்கள் சங்கத் தலைவர் ராஜேஸ்வரன் தலைமையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம், தர்ணா நடத்தினர். இதனையடுத்து, ராஜேஸ்வரன் உள்ளிட்ட 15 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டு கோர்ட்டிற்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர்.

