கும்பகோணம் மாநகராட்சி கமிஷனர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு ஆக்கிரமிப்புகளை அகற்ற மறுத்த விவகாரம்
கும்பகோணம் மாநகராட்சி கமிஷனர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு ஆக்கிரமிப்புகளை அகற்ற மறுத்த விவகாரம்
ADDED : ஜன 11, 2025 10:25 PM
சென்னை:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள குளங்கள், கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் உத்தரவை அமல்படுத்த ஒத்துழைப்பு வழங்காத, கும்பகோணம் மாநகராட்சி கமிஷனர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள குளங்களில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும், அவற்றை அகற்றும்படியும், வழக்கறிஞர் யானை ஜி.ராஜேந்திரன் மனு தாக்கல் செய்தார்.
அவமதிப்பு வழக்கு
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 44 குளங்கள் மற்றும், 11 கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி, 2018ல் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என, வழக்கறிஞர் யானை ஜி.ராஜேந்திரன், கடந்தாண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், அப்துல் குத்துாஸ் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி டி.ஆர்.செந்தில்குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை, நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.
பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
ஓய்வுபெற்ற நீதிபதி தாக்கல் செய்த அறிக்கையில், 'ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு கும்பகோணம் மாநகராட்சி கமிஷனர் ஒத்துழைப்பு வழங்கவில்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.
'கடந்தாண்டு டிச., 24ல் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற கும்பகோணம் சப்- - கலெக்டர் மற்றும் கமிஷனர், வாய்க்கால்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கான்கிரீட் தடுப்புகள், மூன்று நாட்களுக்குள் அகற்றப்படும் என, உறுதி அளித்தனர்.
'ஆனால், கடந்த 8ம் தேதி வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை' என்றும், அறிக்கையில் விளக்கியுள்ளார்.
இதை பார்க்கும் போது, கும்பகோணம் மாநகராட்சி கமிஷனர், ஆக்கிரமிப்பாளர்களுடன் கைகோர்த்து செயல்படுகிறார் என்பதும், ஆக்கிரமிப்புகளை அகற்ற, இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை செயல்படுத்த அவர் தயங்குகிறார் என்பதும், மிகத் தெளிவாகத் தெரிகிறது.
ஒழுங்கு நடவடிக்கை
எனவே, கும்பகோணம் மாநகராட்சி கமிஷனருக்கு எதிராக, நகராட்சி நிர்வாகத்துறை செயலர், உடனே ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநகராட்சி கமிஷனருக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து, வரும் 27ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை, வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

