சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க முயற்சி தயாராகுது 'ஹைடெக்' தடயவியல் ஆய்வகம்
சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க முயற்சி தயாராகுது 'ஹைடெக்' தடயவியல் ஆய்வகம்
ADDED : பிப் 21, 2024 02:46 AM

சென்னை: ''தமிழக காவல் துறையின், மாநில சைபர் கிரைம் பிரிவு தலைமை அலுவலகத்தில், ஹைடெக் தடயவியல் ஆய்வு மையம் அடுத்த மாதம் செயல்பாட்டிற்கு வரும்,'' என, சைபர் கிரைம் பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சஞ்சய் குமார் கூறினார்.
சென்னை அசோக் நகரில், போலீஸ் பயிற்சி கல்லுாரியில், காவல் துறையின் மாநில சைபர் கிரைம் பிரிவின் தலைமையகம் செயல்படுகிறது.
அங்கு, 'ஆன்லைன்' வாயிலாக நடக்கும் சைபர் கிரைம் குற்றங்களை விரைந்து கண்டுபிடித்து, குற்றவாளிகளை கைது செய்ய, ஹைடெக் தடயவியல் ஆய்வகம் அமைக்கப்பட்டு வருகிறது.
ஏ.ஐ., வசதி
இதுகுறித்து, சைபர் கிரைம் பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சஞ்சய் குமார் கூறியதாவது:
சைபர் கிரைம் தடயவியல் ஆய்வகத்தை நவீனப்படுத்தும் பணி நடந்து வருகிறது. நவீன தொழில் நுட்ப கருவிகள் பொருத்தும் பணி முடிந்து, சோதனை நிலையில் உள்ளது.
நவீன கருவிகளை கையாள போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த ஆய்வகம் அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வரும்.
ஆய்வு மையத்தில், 'சைபர் கிரைம்' குற்றங்களுக்கு பயன்படுத்தும் மொபைல் போன்களை தடயவியல் செய்யும் கருவி உள்ளது. இந்த கருவியை தேவையான இடத்திற்கு எடுத்துச் சென்று ஆய்வு செய்யலாம்.
இதில், ஹார்ட் டிஸ்க்குகளை தடயவியல் செய்யும் தொழில் நுட்பமும் உள்ளது.
சி.டி.ஆர்., எனப்படும், மொபைல் போன், கணினி வாயிலாக நடந்த தொடர்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை ஆய்வு செய்யும் கருவி, ஏ.ஐ., தொழில் நுட்ப வசதியுடன், 'வீடியோ'க்களை தடயவியல் மற்றும் பகுப்பாய்வு செய்யும் கருவிகள் இடம் பெற்றுள்ளன.
படங்களின் உண்மை தன்மை; இருட்டில் பதிவாகி உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்யும் கருவி, திறக்கவே முடியாத பி.டி.எப்., ஆவணங்களுக்குரிய ரகசிய குறியீடு எண்களை கண்டறியும் கருவியும் உள்ளது.
தடயவியல் ஆய்வகம்
சைபர் கிரைம் குற்றவாளி குறித்து, ஏதேனும் சிறு தகவல் கிடைத்தாலும், அவர் பற்றி சமூக வலைதளங்களில் ஆய்வு செய்து தரவுகள், படங்கள் மற்றும் இ - மெயில் முகவரி, மொபைல் போன் எண்களை உடனே கண்டறியும் தொழில் நுட்ப கருவியும் உள்ளது.
இதுகுறித்து, தேவையான பயிற்சி போலீசாருக்கு தரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள, 46 சைபர் கிரைம் காவல் நிலையங்களும், ஹைடெக் சைபர் கிரைம் தடயவியல் ஆய்வகத்துடன் இணைத்துள்ளோம். ஆய்வகம் திறப்பு குறித்து முறைப்படி அறிவிக்கப் படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

