4 மாவட்டத்தில் இன்று கனமழை நீலகிரிக்கு 'ஆரஞ்ச் அலெர்ட்'
4 மாவட்டத்தில் இன்று கனமழை நீலகிரிக்கு 'ஆரஞ்ச் அலெர்ட்'
ADDED : ஜூலை 25, 2025 10:17 PM
சென்னை:தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நான்கு மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, இதில், கோவை, நீலகிரிக்கு மிக கனமழைக்கான, 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை:
தமிழகத்தில் நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில், 9 செ.மீ., மழை பெய்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, கோவை மாவட்டம் வால்பாறையில், 8; அதே மாவட்டம் சின்கோனா, உபாசி, நீலகிரி மாவட்டம் மேல்பவானி, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, ஊத்து ஆகிய இடங்களில் தலா, 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
வடக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, நேற்று காலை மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே கரையை கடந்தது. மஹாராஷ்டிரா - கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால், அரபிக் கடலில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.
தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் இடி மின்னல் மற்றும் பலத்த தரைக்காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவை மாவட்டங்களில், இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், அதற்கான ஆரஞ்ச் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் மேகமூட்டமாக காணப் படும், ஒருசில இடங்களில், லேசான மழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

