காலி நாற்காலிகளுடன் சதய விழா; இது, ராஜராஜனுக்கு அவமானம்!
காலி நாற்காலிகளுடன் சதய விழா; இது, ராஜராஜனுக்கு அவமானம்!
UPDATED : நவ 09, 2024 02:27 PM
ADDED : நவ 09, 2024 01:19 PM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜன் சோழனின் 1039வது சதயவிழா நடந்த அரங்கில் காலி சேர்களை பார்த்து, விழாவுக்கு வந்தவர்கள் வேதனையோடு கடந்து சென்றனர்.
தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திரம் அன்று கொண்டாடப்படுவது வழக்கம். ஒரு வாரத்திற்கு முன், பந்தக்கால் நாட்டப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று (நவ.,09) விழா ஓதுவார்கள் பாடல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. சதயவிழாவை முன்னிட்டு அழைப்பிதழ் அச்சிடப்பட்டு அனைவருக்கும் கொடுக்கப்பட்டு இருந்தது.
அழைப்பிதழில் பெயர்கள் மட்டுமே நீண்ட வரிசையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.ஆனால், விழாவோ கூட்டம் ஏதும் இல்லாமல், சிறிய நிகழ்ச்சி போல் நடந்து முடிந்தது. அரங்கம் முழுவதும் காலி நாற்காலிகள் தான் காணப்பட்டன. ராஜராஜ சோழன் எங்கள் சமூகத்தை சேர்ந்தவர் என சொந்தம் கொண்டாடும் அமைப்புகளோ, கட்சியினரோ யாரையும் காணவில்லை.
அதேநேரத்தில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றால் தனது பதவி பறிபோய்விடும் என்ற மூடநம்பிக்கை இப்போது பலருக்கும் வந்து விட்டது. இதனால் அரசியல் பிரமுகர்கள் விழாவுக்கு வர அஞ்சி நடுங்குகின்றனர். இதுதான் காலி நாற்காலிகள் இருப்பதற்கு காரணம் என்கின்றனர் அதிகாரிகள்.
'இப்படி காலி சேர்களுடன் சதய விழா நடத்துவது, ராஜராஜ சோழனுக்கும் அவமானம், தஞ்சைக்கும் அவமானம்' என்கின்றனர், விமர்சகர்கள்.
புகழ் நிலைத்து நிற்கும்!
விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் பேசியதாவது: ராஜராஜ சோழனின் புகழ் இந்த உலகம் இருக்கும் வரை நிலைத்து நிற்கும். இப்படி பெருமைமிக்க ராஜராஜ சோழனின் பெயரை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு சூட்டி ராஜராஜ சோழன் தமிழ் பல்கலைக்கழகம் என அரசு மாற்ற வேண்டும். அதுதான் ராஜராஜ சோழனுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய மரியாதை என இந்த நிகழ்வில் மூலம் தமிழக அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

