வேட்டியை மட்டும் தான் உருவவில்லை! குமுறிய பெண்ணுக்கு அண்ணாமலை பதில்
வேட்டியை மட்டும் தான் உருவவில்லை! குமுறிய பெண்ணுக்கு அண்ணாமலை பதில்
ADDED : ஏப் 08, 2024 04:07 AM

பல்லடம் : ''லஞ்சம், லஞ்சம் என, வேட்டியை மட்டும் தான் இன்னும் உருவவில்லை,'' என, பல்லடத்தில், லஞ்சம் கொடுத்ததாக குமுறிய பெண்ணிடம், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை ஆதங்கப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் அண்ணாமலை நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, லஞ்சம் கொடுத்து தான் அனைத்து வேலைகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளதாக, பெண் ஒருவர் தன் குமுறலை வெளிப்படுத்தினார்.
அப்பெண் பேசியதாவது:
வீட்டுமனைக்கு, பட்டா வாங்குவதற்கு என்னிடம் லஞ்சம் வாங்கினர். நீங்கள் வெற்றி பெற்று வந்தால் முதலில் நேர்மையான ஊராட்சி தலைவர்களை நியமிக்க வேண்டும்.
லஞ்சம் வாங்கும் ஊராட்சி தலைவர்கள், ஒரு கட்சியில் அதிகாரம் போய்விட்டால் மற்றொரு கட்சிக்கு வருகின்றனர். அங்கும் லஞ்சம் வாங்குகின்றனர்.
இவ்வாறு கட்சி விட்டு கட்சி தாவி லஞ்சம் வாங்குவதையே வேலையாக கொண்டுள்ளனர். நீங்கள் நியாயமான ஊராட்சி தலைவர்களை தேர்ந்தெடுங்கள். மாற்று கட்சியில் இருந்து யார் வந்தாலும் அவர்கள் பயோடேட்டாவை பாருங்கள். இவ்வாறு பேசினார்.
இதற்கு பதில் அளித்து அண்ணாமலை பேசியதாவது:
இன்று நாம் தீர்வை நோக்கி சென்று வருகிறோம். பிரச்னை உங்களுக்கும் தெரியும்; எனக்கும் தெரியும். எங்கு பார்த்தாலும் லஞ்சம், லஞ்சம் என, வேட்டியை மட்டும் தான் இன்னும் உருவாமல் உள்ளனர்.
நுாறு சதவீதம் இலவசமாக கொடுக்கக்கூடிய மத்திய அரசின் திட்டங்களுக்கு, தி.மு.க.,வினர் லஞ்சம் வாங்குகின்றனர். அரசியல் மாற்றம் இந்த தேர்தலில் இருந்து ஆரம்பிக்கட்டும். அதன் பின் உள்ளாட்சி தேர்தலில் நல்லவர்களை நிற்க வைப்போம்.
ஊர் மக்கள் எல்லாம் சேர்ந்து நல்ல பொது வேட்பாளரை நிறுத்த வையுங்கள். அவருக்கு நானும் ஆதரவு தருகிறேன். மாற்றம் என்பது முதலில் ஒரு இடத்தில் இருந்து ஆரம்பிக்கட்டும். அது கோவை தொகுதியாக இருக்கட்டும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
தொடர்ந்து பேசிய பெண்ணிடம், ''நீங்கள் என்னை நம்புகிறீர்களா? இல்லையா?,'' என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார். மேலும், ''ஐ.பி.எஸ்., அதிகாரியாக இருந்த என்னை நம்புவதாக இருந்தால், ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள். மாற்றத்தை ஏற்படுத்துவோம்,'' என்றார்.
இதற்கு, ''உங்களை நம்புவதால் தான் காலை, 6.00 மணிக்கே வந்து உங்களை பார்க்க காத்திருக்கிறோம்,'' என, அப்பெண் கூறினார்.

