'காந்தி தமிழகத்தில் பிறந்திருந்தால் அவர் மீதும் பொய் வழக்கு போட்டிருப்பர்'
'காந்தி தமிழகத்தில் பிறந்திருந்தால் அவர் மீதும் பொய் வழக்கு போட்டிருப்பர்'
ADDED : பிப் 09, 2024 01:37 AM
சென்னை:''தேவையற்ற பொய் வழக்குகளை போட்டு யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது,'' என, பா.ஜ., இளைஞர் மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.
அவர், சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி:
சில நாட்கள் சென்னையில் இல்லை என்றதும், தலைமறைவாகி விட்டதாக புரளி கிளப்பி விட்டுள்ளனர். நான் தலைமறைவாகவில்லை.
கட்சி தலைமை, எனக்கு வரும் தேர்தல் தொடர்பாக முக்கியமான சில பணிகள் கொடுத்திருந்தது. அப்பணிகளை செய்வதற்காக டில்லியில் இருக்க வேண்டியதானது. அங்கிருந்தபடியே, தலைமை இட்ட பணிகளை செய்து முடித்திருக்கிறேன்.
இருந்த போதும், ஜோடிக்கப்பட்ட ஒரு பொய் வழக்கில் என்னையும் குற்றஞ்சாட்டப்பட்டவர் பட்டியலில் தமிழக போலீசார் சேர்த்துள்ளனர் என்று அறிந்ததும், சட்டத்தை மதிக்கும் மனிதனாக இருக்கும் நான், உடனே சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரை தொடர்பு கொண்டேன்.
என் தரப்பு விளக்கம் என்ன என்பதை தெரிவிக்கவே, அவரை தொடர் கொண்டேன். ஆனால், அவர் என்னுடைய அழைப்பை ஏற்கவில்லை.
தேர்தலுக்கு முன், என்னை கைது செய்ய வேண்டும் என மாநில அரசு துடிக்கிறது. பா.ஜ., மீதான அச்சம் தான் காரணம். தமிழகத்தில் நாங்கள் தான் எதிர்க்கட்சி போல் செயல்படுகிறோம் என்பது உறுதியாகி விட்டது.
காவல் துறை தவறான தகவல்களை கொண்டு வழக்குப்பதிவு செய்கிறது. என்னுடன் இருப்பவர்களின் குடும்பத்தினரை இரவு, பகலாக விசாரணை என்ற பெயரில் கடுமையாக தொந்தரவு செய்து வருகின்றனர். அரசியலை அரசியலாக மோத முடியாமல் தி.மு.க., செயல்படுகிறது. ஒரு தெளிவான அரசியல் தமிழகத்தில் வர வேண்டும்.
காந்தியே தமிழகத்தில் பிறந்திருந்தாலும் கூட, அவர் மீதும் தி.மு.க., அரசு 10 பொய் வழக்குகளை போட்டிருக்கும். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இருந்திருந்தால் அவரையும் என்ன பண்ணியிருப்பரோ?
மேலும், இரண்டு வழக்குகள் என் மீது பதிய தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. யார் வீட்டிலாவது தண்ணீர் வரவில்லை என்றால் கூட, அதற்கும் என் மீது தான் வழக்கு போடுவர். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேரைக் கேட்டாலே, தி.மு.க.,வும், அரசும் பதற்றத்தின் உச்சத்துக்கு சென்று விடுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

