ADDED : பிப் 28, 2024 12:03 AM
சென்னை:'தெரு வாரியாக நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை சீரமைக்கும் போது, வணிக பகுதிகளை பல்வேறு பாகங்களாக பிரிக்க வேண்டும்' என, தமிழக அரசு அமைத்த உயர்நிலை குழு தெரிவித்துள்ளது.
நில வழிகாட்டி மதிப்புகளை சீரமைக்க, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி வாசுகி தலைமையில், உயர்நிலை குழு அமைக்கப்பட்டுஉள்ளது.
முரண்பாடு
இக்குழுவினர், மண்டல வாரியாக சார் - பதிவாளர் அலுவலகங்களை தேர்வு செய்து, ஆய்வு பணிகள் மேற்கொண்டனர்.
சென்னை, வேலுார் மண்டலங்களில் வழிகாட்டி மதிப்பு ஆய்வுகள் முடிந்துஉள்ளன.
இதுகுறித்து, பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வழிகாட்டி மதிப்புகளை சீரமைக்கும் நேரத்தில், முரண்பாடுகள் களைவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். சென்னை, வேலுார் மண்டலங்களில், தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டிய பகுதிகளை, 'தாக்கம் மிக்க இடம்' என, வகைப்படுத்தபரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
இந்த இரு மண்டலங்களிலும், தெரு வாரியாக வணிக பகுதிகளுக்கான நில வழிகாட்டி மதிப்புகளில் முரண்பாடுகள் காணப்படுகின்றன.
பரிந்துரை
ஒரு தெரு என்பது மிக நீண்ட, பெரிய பகுதியாக வருவதால், இதை ஒன்றுக்கு மேற்பட்ட பாகங்களாக பிரித்து, மதிப்பு நிர்ணயிக்க வேண்டும்.
அதற்கு ஏற்ற வகையில், சார் -பதிவாளர் அலுவலகம் வாரியாக பாகம் பிரித்து, புதிய மதிப்பு பரிந்துரைகளை அனுப்ப வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

