காவி திருவள்ளுவர் படம் வெளியிட்ட கவர்னர்; தி.மு.க. கொந்தளிப்பு!
காவி திருவள்ளுவர் படம் வெளியிட்ட கவர்னர்; தி.மு.க. கொந்தளிப்பு!
ADDED : ஜன 17, 2024 03:29 AM

சென்னை: காவி உடையணிந்த திருவள்ளுவர் படத்துடன், கவர்னர் ரவி திருவள்ளுவர் தின வாழ்த்துச் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து, தி.மு.க., அரசுக்கும், கவர்னர் ரவிக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.
திருவள்ளுவர் தினத்தையொட்டி, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்டோர், வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர்.
ஆன்மிக பூமி
கவர்னர் ரவி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், 'திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நம் தமிழகத்தில் பிறந்த பெரும் புலவரும், சிறந்த தத்துவஞானியும், பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு, என் பணிவான மரியாதையை செலுத்துகிறேன்.
'அவரது ஞானம் நம் தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து வளப்படுத்தி, ஒட்டுமொத்த மனித குலத்திற்கு வழிகாட்டியாகவும், உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது' என கூறியிருந்தார்.
திருக்குறளில் உள்ள பக்தி என்ற ஆன்மாவை, ஜி.யு.போப் தன் ஆங்கில மொழிபெயர்ப்பில் சிதைத்து விட்டதாக, கவர்னர் ரவி பேசியது ஏற்கனவே சர்ச்சையானது.
அதைத் தொடர்ந்து, அவர் நேற்று வெளியிட்ட காவி உடையணிந்த திருவள்ளுவர் படமும், பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி என்ற வரிகளும், தி.மு.க.,வினரை கொதிப்படையச் செய்துள்ளது.
தமிழகத்தை ஈ.வெ.ரா., மண், திராவிட மாடல் என, தி.மு.க.,வினர் கூறி வரும் நிலையில், ஆன்மிக பூமி என்று, கவர்னர் ரவி கூறியிருப்பதும் சர்ச்சையாகியுள்ளது.
கறைப்படுத்த முடியாது
இதற்கு சமூக ஊடகங்களில், தி.மு.க.,வினரும் அவரது ஆதரவாளர்களும், கடும் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.
கவர்னர் ரவிக்கு பதிலளிக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
தமிழினத்தில் பிறந்து, அமிழ்தமிழில் அறம் உரைத்து, உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்.
பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்ற சமூக நீதி கோட்பாட்டையும், முயற்சி மட்டுமே வெற்றி தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும், அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர்.
மொத்தம், 133 அடியில் சிலையும், தலைநகரில் கோட்டமும் அமைத்து போற்றும் குறளோவியத் தமிழகத்தில், வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தி.மு.க., துணை பொதுச்செயலரும் எம்.பி.,யுமான கனிமொழி அளித்த பேட்டி:
திருக்குறள் மற்றும் திருவள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் கவர்னருக்கு இல்லை. திருவள்ளுவரை ஒரு துறவி என யாருமே கூறியதில்லை. அவருக்கு திருமணமாகி, மனைவி இருந்ததாகவும் கருத்து இருக்கிறது.
புரிதல் இல்லை
இல்லறம் குறித்து அவரைப் போல கவித்துவமாக எழுதியிருப்பவர்கள் யாருமே இருக்க முடியாது. திருக்குறளில் எந்த ஒரு மதத்தின் அடையாளமும் இல்லை. சனாதனம் உள்ளிட்ட வேறு எந்த மதத்தையும், அவர் மீது திணிக்க முடியாது.
மதத்தை கடந்து மனிதம் பேசுவது தான் திருக்குறள். மனிதநேயத்துக்கு ஒரு நிறம் இருந்தால், அதுதான் திருவள்ளுவரின் நிறம். வேண்டுமென்றால், வள்ளுவருக்கு கருப்பு நிறம் போடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கவர்னர் ரவியை தொடர்ந்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.,வினரும் காவி திருவள்ளுவர் படத்துடன் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
அதற்குப் பதிலடியாக தி.மு.க.,வினர், காவியுடை, திருநீறு உள்ளிட்ட தனிப்பட்ட அடையாளும் இல்லாத திருவள்ளுவர் படத்துடன் வாழ்த்துச் செய்திகள் வெளியிட்டுள்ளனர்.

