ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவு
ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவு
ADDED : ஜன 03, 2026 02:28 AM

சென்னை: 'அரசு நிலம், நீர் நிலைகள், பூங்காக்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக, புகார்கள் வந்தால், ஒரு மாதத்தில் விசாரணையை துவக்கி, மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும். இல்லையெனில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகராட்சியில், பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப் படுத்தி, நிலத்தை பழைய நிலைக்கு மீட்டெடுக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், துரை சீனிவாசன் என்பவர், பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
ஆக்கிரமிப்பு தொடர்பாக புகார் அளித்து மூன்று மாதங்கள் ஆகியுள்ளன. இந்த புகார் மீது எடுத்த நடவடிக்கை குறித்து, அரக்கோணம் நகராட்சி கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அரசு நிலங்கள், நீர் நிலைகள், பூங்காக்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகப் புகார் வந்தால், அவற்றின் மீது, ஒரு மாதத்துக்குள் விசாரணையை துவக்க வேண்டும்.
மூன்று மாதங்களில் விசாரணையை முடித்து, ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக, ஒழுங்கு நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்களுக்கு சுற்றறிக்கை பிறப்பிக்கும் வகையில், இந்த உத்தரவு நகலை தலைமைச் செயலருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

