தொழில்நுட்ப குழு பரிந்துரையை செயல்படுத்த அரசு உத்தரவு
தொழில்நுட்ப குழு பரிந்துரையை செயல்படுத்த அரசு உத்தரவு
ADDED : பிப் 05, 2024 01:19 AM

சென்னை: சென்னை எண்ணுாரில்அமோனியா கசிவு ஏற்பட்டது தொடர்பாக அமைக்கப்பட்ட தொழில்நுட்ப குழுவின்பரிந்துரைகளை செயல்படுத்த, மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு, தமிழக அரசு உத்தரவிட்டுஉள்ளது.
தமிழக சுற்றுச்சூழல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை எண்ணுாரில்உள்ள கோரமண்டல் இன்டர்நேஷனல் நிறுவனத்தில். டிச., 26ல் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதற்கான காரணத்தை கண்டறிவதற்கு, தமிழக அரசுவாயிலாக தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவில், தமிழக மாசு கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர் கண்ணன், மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய மண்டல அலுவலர் பி.எம்.பூர்ணிமா, இந்திய தொழில்நுட்ப நிறுவன பேராசிரியர் சங்கர் நரசிம்மன் உள்ளிட்ட ஏழு பேர் இடம்பெற்றனர்.
தொழில்நுட்ப குழுவின் விரிவான ஆய்வுக்கு பின், கோரமண்டல் நிறுவனம் கடலுக்கு அடியில் அமோனியா கொண்டு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
மிக்ஜாம் புயலால், அங்கிருந்த கிரானைட் பாறைகள் இடம் மாறியதால், இந்த நிகழ்வு ஏற்பட்டிருக்கலாம் என குழு கணித்துஉள்ளது; இது தொடர்பாக பரிந்துரைகளையும் அளித்துள்ளது.
கடலுக்கு அடியில் தற்போதுள்ள குழாய்களுக்கு மாற்றாக, அதிநவீன கண்காணிப்பு மற்றும் தானியங்கி கட்டுப்பாடு, விபத்து தடுப்பு சாதனங்களுடன், புதிதாக குழாய் அமைக்க வேண்டும்
அமோனியா வாயு காற்றில் நேரடியாக வெளியேற்றப்படுவதை தவிர்த்து, எரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்
தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு சுற்றுச்சூழல் இழப்பீடாக, 5.92 கோடி ரூபாய் வழங்க வேண்டும். காற்று மாசு தடுப்பு சட்ட நிபந்தனைகளை செயல்படுத்தாததால், தொழிற்சாலை மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 20 பரிந்துரைகளை இக்குழு அளித்துள்ளது.
தொழில்நுட்ப குழுவின் அறிக்கையை, தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் அரசிடம் சமர்ப்பித்தது. குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்றது.
அனைத்து பரிந்துரைகளையும் உடனடியாக அமல்படுத்தி அறிக்கை அளிக்கும்படி, மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.

