பத்திரப்பதிவு விபரம், ஆதார் எண் பட்டாவில் சேர்க்க அரசு முடிவு
பத்திரப்பதிவு விபரம், ஆதார் எண் பட்டாவில் சேர்க்க அரசு முடிவு
ADDED : டிச 13, 2025 03:43 AM

சென்னை: விற்பனை பத்திர எண், சொத்தின் எல்லைகள், ஆதார் எண் ஆகிய விபரங்களை, பட்டாவில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கி உள்ளன.
தமிழகத்தில் வீடு, மனை வாங்கும்போது, அதற்கான பத்திரப்பதிவுடன் பட்டா மாறுதலிலும் மக்கள் தற்போது கவனம் செலுத்துகின்றனர்.
இதை கருத்தில் வைத்து, பட்டா மாறுதல் பணிகளை எளிமையாக்கி வருவாய் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
தற்போது வழங்கப் படும் பட்டாவில், மாவட்டம், தாலுகா, கிராமம், நில உரிமையாளர் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், நிலத்தின் சர்வே எண், உட்பிரிவு எண், பரப்பளவு, வகைப்பாடு ஆகிய அடிப்படை விபரங்கள் மட்டுமே உள்ளன.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த வடிவமைப்பிலேயே தற்போதும் பட்டா வழங்கப்படுகிறது. இன்றைய சூழலில், பட்டாவில் சொத்து குறித்த பல்வேறு கூடுதல் விபரங்கள் இடம்பெற வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
இது குறித்து, சமூக ஆர்வலர் பி.விஸ்வநாதன் கூறியதாவது:
முந்தைய காலங்களில், பட்டா பெற்ற நபர், அந்த சொத்தை விற்பது அரிதாக நடக்கும். ஆனால், தற்போது நிலங்கள் தொடர்பான அடுத்தடுத்த பரிமாற்றங்கள் அதிகரித்து உ ள்ளன.
குறிப்பாக, பட்டாவில் உள்ள விபரங்களை பத்திரத்துடன் ஒப்பிட்டு சரிபார்க்கும்போது, பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன. இதனால், பட்டாவின் வடிவமைப்பை மாற்றி, அதில் கூடுதல் விபரங்கள் சேர்க்கப்பட வேண்டும்.
இதன்படி, பட்டாவில், தொடர்புடைய பத்திரத்தின் எண், சொத்தின் நான்கு எல்லைகள் குறித்த விபரம், உரிமையாளரின் ஆதார் எண் போன்ற விபரங்களை சேர்க்க வேண்டியது அவசியமாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சொத்து உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் பட்டாவின் வடிவமைப்பை மாற்றவும், அதில் கூடுதல் விபரங்கள் சேர்க்கவும் அவசியம் உள்ளது. இதற்கான பணிகளை துவங்க, நில நிர்வாக ஆணையருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

