முதலில் மறக்கப்பட்டதா ஜனனி பாடல்: பாடி முடித்து வைத்த இளையராஜா
முதலில் மறக்கப்பட்டதா ஜனனி பாடல்: பாடி முடித்து வைத்த இளையராஜா
UPDATED : செப் 15, 2025 12:22 PM
ADDED : செப் 15, 2025 12:20 PM

இளையராஜாவின் இசைக் கச்சேரிகளில் பல ஆண்டுகளாக ‛ஜனனி ஜனனி ஜகம் நீ...' பாடல்தான் முதலில் பாடப்படும். சென்டிமென்ட் ஆக அந்த பாடலை இளையராஜா பாடுவது வழக்கம். இளையராஜா பங்கேற்ற கச்சேரிகளில் இதுதான் நடைமுறை. சிலசமயம், இளையராஜா குடும்ப உறுப்பினர்கள், அவருடன் இணைந்து பாடுவார்கள்.
1982ல் கே.சங்கர் இயக்கத்தில் ‛தாய் மூகாம்பிகை' படத்தில் இடம் பெற்ற பாடல் இது. முதலில் இந்த பாடலை ஜேசுதாஸ் பாடினால் நன்றாக இருக்கும் என்று இயக்குனரிடம் எம்ஜிஆர் சொன்னாராம். ஆனால், சூழ்நிலைகள் காரணமாக இளையராஜாவே பாடினார். கர்நாடக மாநிலம், கொல்லுார் தாய் மூகாம்பிகையை போற்றும் இந்த பாடலை ஆதிசங்கரரர் பாடுவதாக காட்சி அமைந்து இருக்கும். அதனால், பாடலின் முதலில் வரும் சமஸ்கிருத வரிகள் ஆதிசங்கரரின் சவுந்தர்ய லஹரியில் இருந்து எடுக்கப்பட்டு இருக்கும். மீதி வரிகளை பக்திப்பூர்வமாக எழுதியவர் கவிஞர் வாலி.
இளையராஜா ஜனனி பாடலை ஆர்மோனியம் வைத்து பாட ஆரம்பித்தால் கைதட்டல் விசில் பறக்கும். ஆனால், சென்னையில் நடந்த தமிழக அரசின் இளையராஜா பாராட்டு விழாவின் துவக்கத்தில் இந்த பாடல் பாடப்படவில்லை. அதற்கு பதிலாக ‛அமுதே தமிழே' என்ற பாடலை, தனது இருக்கையில் இருந்தபடியே,பாடினார் இளையராஜா. இந்த பாடல் அவர் இசையமைத்த ‛கோயில் புறா' படத்தில் இடம் பெற்றது. புலமைப்பித்தன் எழுத பி.சுசீலா, உமாரமணன் பாடியிருந்தனர். இந்த படம் 1981ல் ரிலீஸ் ஆனது.
இந்த மாற்றம் பலருக்கு ஆச்சரியத்ததை கொடுத்தது. ஜனனி பாடலை எப்படி மறந்தார் இளையராஜா என்று பலரும் கேள்வி எழுப்பினர். ‛இன்று பாராட்டு விழாவில் பாடும் பாடல்கள் பட்டியலை தந்தவர் முதல்வர் ஸ்டாலின்' என்று பின்னர் விளக்கம் கொடுத்தார் கமல்ஹாசன். பொதுவாக திமுக., மற்றும் முதல்வர் ஸ்டாலின் அரசு பகுத்தறிவு கொள்கை கொண்டவர்கள் என கூறுவதால் பக்தி பாடலை தவிர்த்து இருக்கலாம். ஆனாலும், பார்வையாளர்களுக்கு இது குறையாக இருந்தது.
ரஜினி, கமல், இளையராஜா பேசி முடிந்ததும், பார்வையாளர்கள் இளையராஜாவை பாட சொல்லி வேண்டுகோள் வைத்தனர். நான் தான் பாடிவிட்டேனே என்று முதலில் தயங்கிய இளையராஜா பின்னர் சற்றும் யோசிக்காமல் முதல்வர் முன்னிலையில் ‛ஜனனி ஜகம் நீ...' பாடலை உணர்ப்பூர்வமாக பாடி விழாவை நிறைவு செய்தார். பலமுறை தனது பேட்டிகளில் தனது இசை இறைவனிடம் இருந்து வருகிறது. அவன்தான் பாட வைக்கிறார் என்று கூறியிருக்கிறார். விழா ஏற்பாட்டாளர்கள் ஜனனி பாடலை மறந்திருந்தாலும், விழா முடிவில் அந்த பாடலை தவிர்க்க முடியவில்லை என கூறியபடி ரசிகர்கள் விடை பெற்றனர்.
கடந்த வாரம் இந்த பாடல் பாடப்பெற்ற கொல்லுார் மூகாம்பிகை கோயிலுக்கு சென்ற இளையராஜா சில கோடி மதிப்புள்ள வைர கீரிடம், தங்கவாளை சமர்பித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.