ADDED : மார் 12, 2024 02:21 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை சேர்ந்தவர் சுப்பிரமணியன், 28. தேவக்கோட்டை தனியார் நிதி நிறுவன ஊழியர். புதுக்கோட்டையில் வாடகை வீட்டில் வசித்தார். இவரது மனைவி சுஷ்மிதா, 26. இவர்களது மகள் ஹரிணி, 3. நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணியன் குடும்பத்துடன் பைக்கில், ஹெல்மெட் அணியாமல், திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்றார்.
அங்கிருந்து பைக்கில் வீடு திரும்பிய போது, புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே எதிரே, புதுக்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பஸ், இவர்கள் பைக் மீது மோதியது. துாக்கி வீசப்பட்ட சுப்பிரமணியன், ஹரிணி சம்பவ இடத்திலேயே இறந்தனர்; சுஷ்மிதா படுகாயமடைந்தார். புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.
அப்பகுதி மக்கள் விபத்து ஏற்படுத்திய ஆம்னி பஸ்சை அடித்து நொறுக்கினர். திருகோகர்ணம் போலீசார் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவர் மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டியை சேர்ந்த சரவணன், 34, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.

