UPDATED : மே 04, 2025 01:33 AM
ADDED : மே 04, 2025 01:08 AM

திருப்பூர்:விழிஞ்ஞம் துறைமுகம், முழு பயன்பாட்டுக்கு வரும்போது, திருப்பூரின் ஏற்றுமதி எளிதாகுமென, பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே அமைக்கப்பட்டுள்ள, விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகம், சர்வதேச கப்பல் பாதையில் இருந்து, 10 கடல் மைல் துாரத்தில் அமைந்துள்ளது.
மிக ஆழமான துறைமுகம் என்பதால், சர்வதேச கடல்பாதையில் இயங்கும் கப்பல்கள், இத்துறைமுகம் வந்து செல்லும். தமிழகத்தின் பெரும்பாலான ஏற்றுமதி வர்த்தகம், துாத்துக்குடி துறைமுகம் வாயிலாக நடக்கிறது. சர்வதேச சரக்கு கப்பல்கள், துாத்துக்குடி துறைமுகம் வருவதில்லை.
புதிய உத்வேகம்
இதன் காரணமாக, துாத்துக்குடியில் இருந்து கொழும்பு துறைமுகம் எடுத்துச்சென்று, அங்கு வரும் சர்வதேச சரக்கு கப்பலில் ஏற்றி அனுப்புகின்றனர்.
நம் நாட்டில் இருந்து, சர்வதேச சரக்கு கப்பல்களில் கன்டெய்னர்களை ஏற்ற, துபாய், கொழும்பு மற்றும் சிங்கப்பூர் அனுப்பி வைக்க வேண்டிய நிலை உள்ளது.
இனிமேல், விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து, நேரடியாக சர்வதேச கப்பல்களில் ஏற்றி அனுப்பும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இதுகுறித்து, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவர் சக்திவேல் கூறுகையில், ''விழிஞ்ஞம் துறைமுகம் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது; முழு பயன்பாட்டுக்கு வரும்போது, திருப்பூர் ஏற்றுமதி எளிதாக வாய்ப்புள்ளது,'' என்றார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், ''சர்வதேச துறைமுகத்தை, பிரதமர் திறந்து வைத்துள்ளதால், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியில் புதிய உத்வேகம் கிடைக்கும்.
துாரம் குறையும்
''ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி காலத்தில், 10 நாள் வரை குறையும். கொழும்பு துறைமுகம் செல்லாமல், நேரடியாக சர்வதேச கப்பலில் சரக்கை ஏற்றுவதால், பல்வேறு வகையில் செலவினம் குறையும்,'' என்றார்.
அனைத்து ஜவுளி ஏற்றுமதி முகமைகள் கூட்டமைப்பு தலைவர் இளங்கோவன் கூறுகையில், ''திருப்பூரில் இருந்து துாத்துக்குடி செல்ல, ஐந்து மணி நேரம் ஆகும். விழிஞ்ஞம் செல்ல, ஏழு மணி நேரம் ஆகலாம். துறைமுகத்துக்கு, தேசிய நெடுஞ்சாலை வசதிகளும் உள்ளன.
''பின்னலாடைகளை, நேரடியாக, சர்வதேச சரக்கு கப்பலில் ஏற்றி அனுப்பலாம். கடல் போக்குவரத்து துாரமும் குறைய வாய்ப்புள்ளது,'' என்றார்.

