கூட்டணி அமைத்தாலும் 'டார்ச் லைட்' சின்னத்திலேயே போட்டி: கமல் உறுதி
கூட்டணி அமைத்தாலும் 'டார்ச் லைட்' சின்னத்திலேயே போட்டி: கமல் உறுதி
ADDED : பிப் 08, 2024 02:05 PM

சென்னை: எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும் 'டார்ச் லைட்' சின்னத்திலேயே போட்டியிடுவோம், இல்லையெனில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவோம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் தலைவராக உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி, திமுக கூட்டணியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மறைமுக பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. ம.நீ.ம சார்பில் கோவை மற்றும் தென் சென்னை ஆகிய 2 தொகுதிகளை கேட்டு வருகிறது. இதில் ஏதேனும் ஒன்றாவது கிடைக்குமா என கமல் கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.
ஒருவேளை திமுக கூட்டணியில் ம.நீ.ம.,வுக்கு சீட் கொடுத்தாலும், தங்களது உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட நிபந்தனை விதிக்கப்படலாம். கடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 2 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் அதில் ஒன்றில் உதயசூரியன் சின்னத்தில் அக்கட்சி போட்டியிட்டது. அதேபோல், கமல் கட்சிக்கு நிபந்தனை விதிக்கப்பட்டு சீட் ஒதுக்குவார்களா என சிலநாட்களில் அறிவிப்பு வெளியாகலாம்.
ஆனால், லோக்சபா தேர்தலுக்கு ம.நீ.ம கட்சிக்கு 'டார்ச் லைட்' சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு கமல் சார்பில் கடந்த டிசம்பர் 17ம் தேதியே கடிதம் மூலம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும் 'டார்ச் லைட்' சின்னத்திலேயே போட்டியிடுவோம் என கமல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அந்த சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்காவிட்டால், தனிச்சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் கமல் அறிவித்துள்ளார்.

