ADDED : பிப் 07, 2024 02:00 AM

ந.தேவதாஸ், சென்னையில் இருந்து எழுதுகிறார்: 'நீதிமன்ற வழக்குகளில், மனுதாரர்களின் ஜாதி அல்லது மதத்தை குறிப்பிடும் நடைமுறை இனி தவிர்க்கப்பட வேண்டும்' என, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நான் ஒரு முன்னாள் படைவீரன். இந்தியாவிலேயே ஜாதி குறிப்பிடப்படாத ஒரே துறை, இந்திய ராணுவம் மட்டும் தான். அன்று ராணுவத்தில் சேரும்போதே, மதத்தை மட்டும் குறிப்பிடுவது நடைமுறை.
ஏனெனில், அன்னிய நாட்டுடன் ஏற்படும் யுத்தத்தில் ஒருவேளை இறந்து விட்டால், அவரவர் மத வழக்கத்தின்படி அங்கேயே உடல் நல்லடக்கம் செய்யப்படும்; இதுதான் அன்றைய நடைமுறை. ஆனால், வீரரின் சீருடை மட்டும் பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஆனால், தற்போதைய நடைமுறையில் அதிக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இறந்த உடலை அவரின் சொந்த ஊருக்கு அனுப்புவதும் அல்லாமல், ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இதில் ஒரு வருந்தத்தக்க விஷயம் என்னவெனில், ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று வெளியே வந்ததும், மறுவேலைவாய்ப்பிற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தால், ஜாதி குறுக்கிடுகிறது.
உதாரணத்திற்கு, 1986ல் ராணுவத்தில் பணி நிறைவு பெற்று நான் வெளியே வந்ததும், சிறைத்துறை வார்டன் பதவிக்காக ஒரு நேர்முகத் தேர்விற்கு சென்ற போது உயரம் குறைவு என நிராகரிக்கப்பட்டு மிக வேதனை அடைந்தேன். அப்பதவி, என்னை விட உயரம் குறைவான, பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட்டது.
இதுபோன்ற நடைமுறையும் மாற்றப்பட வேண்டும். தற்போது, மனுவில் ஜாதி, மதம் குறிப்பிடக்கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு காலம் கடந்த உத்தரவாக இருந்தாலும், வருங்காலங்களில் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

