'டாஸ்மாக்' சொல்வதெல்லாம் பொய் ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை வாதம்
'டாஸ்மாக்' சொல்வதெல்லாம் பொய் ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை வாதம்
ADDED : ஏப் 18, 2025 01:24 AM

சென்னை:'டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தியபோது, அதிகாரிகள் துன்புறுத்தப்பட்டதாக கூறுவது பொய்யான தகவல். இந்த விவகாரத்தை திசை திருப்ப முயற்சி நடக்கிறது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை கூறியுள்ளது.
சென்னை, 'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில், கடந்த மாதம் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
மாநில அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த சோதனையை சட்ட விரோதமானது என, அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளை துன்புறுத்த தடை கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் மீதான இறுதி விசாரணை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமலாக்கத் துறை சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, தன் வாதத்தை நேற்றும் தொடர்ந்தார்.
அவர் வாதாடியதாவது:
டாஸ்மாக் தலைமை அலுவலக சோதனையின்போது, பெண் அதிகாரிகள் யாரும் இரவில் தங்க வைக்கப்படவில்லை. ஒரு சில ஆண் அதிகாரிகள் மட்டுமே, மூன்று நாளும் தலைமை அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
சோதனையின்போது, டாஸ்மாக் அதிகாரிகளுக்கோ அல்லது அலுவலக உடைமைகளுக்கோ, எந்த சேதமும் ஏற்படுத்தவில்லை. இதை எல்லாம் ஒப்புக் கொண்டுதான் விசாரணை நிறைவில், அதிகாரிகள், 'பஞ்சநாமா'வில் கையெழுத்திட்டு உள்ளனர்.
சோதனை நடந்தபோது, அமலாக்கத் துறை சார்பில், பெண் அதிகாரிகள் இருந்தனர். அதிகாரிகள் துன்புறுத்தப்பட்டனர் என்கிற பொய்யான தகவல்களை கூறி, இந்த விவகாரத்தை திசைதிருப்ப முயற்சிக்கின்றனர்.
எதற்காக வந்திருக்கிறோம் என்ற தகவலை, டாஸ்மாக் நிறுவன தலைவர், மேலாளரிடம் தெரிவித்த பின்தான் சோதனை துவக்கப்பட்டது.
அனைவருக்கும் உணவு அளிக்கப்பட்டு, போதிய ஓய்வும் அளிக்கப்பட்டது.
நள்ளிரவில், பெண் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பவில்லை. அவர்களின் பாதுகாப்பு கருதி, முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதேபோல சோதனையின்போது, யாருடைய அந்தரங்க உரிமையும் பாதிக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் வாதாடினார்.
அமலாக்கத் துறை தரப்பு வாதம் நிறைவு பெற்றதால், டாஸ்மாக் தரப்பு பதில் வாதத்துக்காக, வரும் 21ம் தேதிக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

