காலி மது பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் : ஊழியர் சங்கம் எதிர்ப்பு
காலி மது பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் : ஊழியர் சங்கம் எதிர்ப்பு
ADDED : செப் 17, 2025 05:58 AM

சென்னை: காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, தொழிற்சங்கங்களுடன் நடத்திய, 'டாஸ்மாக்' நிர்வாகம் நடத்திய பேச்சில், ஒரு தொழிற்சங்கம் கூட ஆதரவு அளிக்கவில்லை. இதனால், அத்திட்டத்தை செயல்படுத்துவது கேள்விக்குறியாகி உள்ளது.
தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனம் சில்லரை கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மது வகைகளை விற்கிறது. மதுவை அருந்தி விட்டு காலி பாட்டில்களை, வனம், மலை பகுதிகள், சாலையில் துாக்கி வீசுகின்றனர்.
இதனால், கண்ணாடி பாட்டிலை மிதித்து, கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்த, டாஸ்மாக்கிற்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இத்திட்டம் தற்போது, 15 மாவட்டங்களில் உள்ள மது கடைகளில் செயல்பாட்டில் உள்ளது. இது விரைவில், அனைத்து மாவட்ட மது கடைகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு, மது கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இதனால், திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக, 15க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களுடன், டாஸ்மாக் அதிகாரிகள், சென்னையில் கடந்த இரு தினங்களாக பேச்சு நடத்தினர். ஒரு சங்கம் கூட ஆதரவு அளிக்கவில்லை. எனவே, இத்திட்டத்ததை செயல்படுத்துவது கேள்விக்குறியாகி உள்ளது.
இதுகுறித்து, தொழிற்சங்கத்தினர் கூறியதாவது:
மது கடைகளில், மாலை முதல் இரவு வரை கூட்டம் அலைமோதுகிறது. அந்த சமயத்தில் காலி பாட்டில்களை திரும்ப பெறுவது சிரமம்; கடைகளிலும் போதிய இடவசதி இல்லை. எனவே, இந்த பணியில் பணியாளர்களை ஈடுபடுத்த கூடாது என்று, டாஸ்மாக் அதிகாரிகளிடம் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு விட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.