முதல்வர் கோப்பை போட்டியில் மின்னணு விளையாட்டுகள் சேர்ப்பு
முதல்வர் கோப்பை போட்டியில் மின்னணு விளையாட்டுகள் சேர்ப்பு
ADDED : ஜூலை 24, 2025 10:41 PM
திருப்பூர்:முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில், முதல் முறையாக இ - ஸ்போர்ட்ஸ் எனப்படும், மின்னணு விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு பணியாளர்களுக்கு, ஆண்டு தோறும் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
நடப்பாண்டு போட்டிகள், ஆக., 22ல் துவங்குகின்றன. மாவட்டம், மண்டல அளவிலான போட்டிகளை தொடர்ந்து, மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
வழக்கமான விளையாட்டுகளோடு, இக்காலத்துக்கு ஏற்றவகையில் 'இ - ஸ்போர்ட்ஸ்' எனப்படும், மின்னணு விளையாட்டுகளும், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கம்ப்யூட்டரில் விளையாடும் வகையிலான, 'இ - செஸ், இ - புட்பால்' மட்டுமின்றி ஸ்ட்ரீட் பைட்டர், போக்கிமோன், வேலோரென்ட், பி.ஜி.எம்.ஐ., ஆகிய சண்டை வகையிலான விளையாட்டுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
இது குறித்து, மின்னணு விளையாட்டு சங்கத்தினர் கூறியதாவது:
நடப்பு ஆண்டுக்கான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில், முதன்முறையாக, ஆறு மின்னணு விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இவை, மாநில அளவில் மட்டும் நடத்தப்படும். மாநில மின்னணு விளையாட்டு சங்கம், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து, புதிய விளையாட்டுகளை நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது.
கடந்த, 2024ல் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில், மின்னணு விளையாட்டுகள் சோதனை ஓட்டமாக மட்டுமே நடத்தப்பட்டன. நடப்பாண்டு, மற்ற விளையாட்டு போலவே, மின்னணு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.
ஆனாலும், மாவட்ட, மண்டல அளவில் போட்டிகள் நடைபெறாது; மாநில அளவில் பொது பிரிவினருக்கு மட்டும் போட்டிகள் நடத்தப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

