மின் பழுதுக்கு பத்தே வினாடியில் தீர்வு காண வழி தேடப்படும்
மின் பழுதுக்கு பத்தே வினாடியில் தீர்வு காண வழி தேடப்படும்
ADDED : அக் 17, 2024 01:30 AM
சென்னை:மின்னகம் நுகர்வோர் சேவை மையத்தில், மக்களிடம் இருந்து பெறப்படும் புகார் மீது, விரைவாக நடவடிக்கை எடுக்கும் வகையில், பொது மக்கள் புகாரைப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு தெரிவிப்பதற்கான நேரம், 20 வினாடியில் இருந்து, 10 வினாடியாக குறைக்கப்பட்டு உள்ளது.
சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில், மின்னகம் நுகர்வோர் சேவை மையம் உள்ளது.
அங்கு, 94987 94987 என்ற எண்ணில் மின் தடை உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான அனைத்து புகார்களையும், 24 மணி நேரமும் தெரிவிக்கலாம். 'ஷிப்டு'க்கு, 60 ஊழியர்கள் என, மூன்று ஷிப்டுகளில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சமீபத்தில் துவங்கியுள்ளது. மின் சாதன பழுதால், மின் தடை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, மின்னகத்தில் விரைவாக புகார்களைப் பெறவும், அவற்றின் மீது விரைவாக தீர்வு காணவும், மின் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பொது மக்களிடம் பெறப்படும் புகார்களைப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு தெரிவிப்பதற்கான கால அவகாசம், 20 வினாடியில் இருந்து, 10 வினாடியாக குறைக்கப்பட்டு உள்ளது.
அதாவது, ஒருவர் மின்னகத்தில் புகார் அளித்ததும், மைய ஊழியர் அதை கணினியில் பதிவு செய்வார்.
பின், சம்பந்தப்பட்ட உதவி பொறியாளரின் மொபைல் போன் எண்ணுக்கு புகார் விபரம், நுகர்வோரின் மொபைல் போன் எண்ணுக்கு, புகார் பதிவு செய்யப்பட்ட விபரமும், குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
இந்த பணிக்கு, 20 வினாடிகள் ஆகின்றன. தற்போது, 10 வினாடியாக குறைக்கப்பட்டு உள்ளது. இது தவிர, இப்பணிக்கு கூடுதலாக, 10 ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதனால், மின்னகத்தை தொடர்பு கொண்டு, அழைப்புக்கு காத்திருக்கும் நுகர்வோர்களுக்கு, விரைவாக இணைப்பு கிடைக்கும் என, மின் வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

